குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ஜூன் 22 , 2017 ,வியாழக்கிழமை,

சென்னை : குடியரசுத் தலைவர் தேர்தலில், பா.ஜ., வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக, முதல்வர் பழனிசாமி, நேற்று அறிவித்தார்.அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் உடனான ஆலோசனைக்கூட்டத்திற்கு பிறகு முதல்வர் இவ்வாறு அறிவித்தார்.

ஜூலை மாதத்துடன் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதையடுத்து ஜனாதிபதி  தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 17-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனுக்கள் கடந்த 14-ம் தேதி முதல் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜனாதிபதி வேட்பாளரை இறுதி செய்வது தொடர்பாக பா.ஜ.க நாடாளுமன்றக் குழு கூட்டம் சில தினங்களுக்கு முன் டெல்லியில் நடந்தது. கூட்டத்துக்குப் பின்னர், பா.ஜ.க ஜனாதிபதி வேட்பாளராக பீகார் கவர்னராக இருந்த ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டார். பா.ஜ.க தேசியத் தலைவர் அமித்ஷா இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை ராம்நாத் கோவிந்த் நாளை 23-ம் தேதி தாக்கல் செய்வார் என அமித் ஷா அறிவித்தார். பிரதமர் மோடி போர்ச்சுகல், அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய 3 நாடுகளுக்கு வரும் 24-ம் தேதி தனது சுற்றுப் பயணத்தை தொடங்குகிறார். அதற்கு முன்பாக பா.ஜ.க ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட வேண்டும் என கட்சி மேலிடம் முடிவு செய்தது. அதன்படி, ஜனாதிபதி வேட்பாளர் தேர்வுக்காக அமைக்கப்பட்ட அமித் ஷா, அருண் ஜெட்லி, வெங்கய்யா நாயுடு, ராஜ்நாத்சிங் ஆகியோர் அடங்கிய குழுவினர் பா.ஜ.க வேட்பாளரை தேர்வு செய்து அறிவித்தனர்.

ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு  ராம்நாத் கோவிந்திற்கு ஆதரவு அளிக்குமாறு,  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோரிடம் தொலைபேசி மூலமாக பிரதமர் நரேந்திர மோடி ஆதரவு கோரினார். பிரதமரின் கோரிக்கையை ஏற்று தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில் , பா.ஜ.க சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்துக்கு அதிமுக அம்மா அணி ஆதரவு அளிக்கும் என்று அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி அறிவித்துள்ளார். பிரதமர் மோடி விடுத்த கோரிக்கையை ஏற்று இவ்வாறு முடிவு எடுக்கப்பட்டதாகவும், முதல்வர் எடப்பாடி தெரிவித்தார்.