குடியரசு தின விழாவில் வீரதீர செயல் புரிந்தவர்களுக்கு அண்ணா பதக்கங்களை வழங்கினார் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம்

குடியரசு தின விழாவில் வீரதீர செயல் புரிந்தவர்களுக்கு அண்ணா பதக்கங்களை வழங்கினார் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம்

வெள்ளி, ஜனவரி 27, 2017,

சென்னையில் நேற்று  நடைபெற்ற குடியரசு தின விழாவில், வீரதீர செயல்களில் ஈடுபட்டோருக்கு அண்ணா பதக்கங்களை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வழங்கி கவுரவித்தார்.

சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே நேற்று  நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.இதையடுத்து, வீரதீர செயல்களில் ஈடுபட்டோருக்கு அண்ணா பதக்கங்களை முதல்வர் பன்னீர்செல்வம் வழங்கினார்.

சென்னையில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக பிங்கத்தான் மாரத்தான் கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்டது. இதில் கூவம் ஆற்றின் மேல் மரப்பலகையில் மாணவர்கள் காத்திருக்கும் போது திடீரென மரப்பாலம் உடைந்தது. இதில் 30 மாணவர்கள் ஆற்றில் மூழ்கி உயிருக்கு போராடினர், மாணவர்கள் அனைவரும்  உயிர் பிழைத்த நிலையில், நந்தினி என்ற மாணவி சகதியில் சிக்கி உயிருக்கு போராடினார், அப்போது தன் உயிரையும் பொருட்படுத்தாது துணிச்சலுடன் ஆற்றில் நந்தினியை வேலூர் மாணவி துர்கா காப்பாற்றினார்,  அவரது வீர தீர செயலை பாராட்டி குடியரசு தினவிழாவில் அண்ணாபதக்கம் வழங்கி விழாவில் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பாராட்டு தெரிவித்தார். மாணவி துர்காவுக்கு ரூ 5 ஆயிரம் மதிப்பிலான அண்ணா பதக்கத்துடன் ரூ  . 1 லட்சம் பணமும் வழங்கப்பட்டது.

கோட்டை அமீர் பெயரிலான ‘மதநல்லிணக்க விருது’ டாக்டர் இக்ரம் என்பவருக்கு வழங்கப்பட்டது.  வேலூரை சேர்ந்த இக்ரம், அந்த மாவட்டத்தில் அவ்வப்போது ஏற்படும் மத பிரச்னைகளை  தானாக முன்னின்று தலையிட்டு மதநல்லிணக்கத்தை பேணி காக்கும் வகையில் பிரச்னைகளை தீர்த்து வருகிறார். கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்துவதில் திறம்பட செயலாற்றியவர்களுக்கு வழங்கப்படும் ‘காந்தியடிகள் காவலர் பதக்கம்’ நாகப்பட்டினம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் எஸ்.பி. தங்கதுரை, சென்னை மத்திய புலனாய்வு பிரிவு (வடக்கு) டி.எஸ்.பி.  ஜீவானந்தம், சென்னை அடையாறு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் வேலு. நாகப்பட்டினம் மத்திய புலனாய்வு பிரிவு எஸ்.ஐ. கே.ரமேஷ்குமார், தர்மபுரி மாவட்டம், தொப்பூர் எஸ்.ஐ சி.மாதப்பன் ஆகிய 5 பேருக்கு வழங்கப்பட்டது. மதுவிலக்கு துறையில் பணியாற்றிய இவர்கள் கள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் பெரும் பங்காற்றியமைக்காக இவ்விருது வழங்கப்பட்டது. இதில்  ரொக்கம் ரூ.20 ஆயிரமும், பதக்கமும் அடங்கும்.

வேளாண்மைத்துறையில் சிறப்பாக பணியாற்றும் விவசாயிக்கு வழங்கப்படும் ‘வேளாண்மை சிறப்பு விருது’ திருநெல்வேலி மாவட்ட புளியங்குடி கிராமத்தை சேர்ந்த விவசாயி சங்கரநாராயணன் பெற்றார். இவர் திருந்திய நெல்சாகுபடி என்ற புதிய தொழில் நுட்பமுறையினை பல ஆண்டுகளாக பின்பற்றி விவசாயம் செய்து வருகிறார். வேளாண்மைத்தறை பரிந்துரைத்த புதிய தொழில் நுட்பம் மற்றும் நீர் மறைய நீர்கட்டு என்ற நீர் நிர்வாகம் ஆகியவற்றை கடைபிடித்து 50 சென்ட் நிலத்தில் 3941 கிலோ தானிய மகசூல் அதாவது ஹெக்டேருக்கு 19705 கிலோ தானிய மகசூல் செய்துள்ளார். அதன் அடிப்படையில் விவசாயி சங்கநாராயணனுக்கு வேளாண்மைத்துறை சிறப்பு விருது மற்றும் ரூ.5 லட்சம் காசோலை மற்றும் பதக்கத்தை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கி கெளரவித்தார்.