குடியரசு தின விழாவில், 4 பேருக்கு வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கங்களை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்:முதலமைச்சருக்கு விருதாளர்கள் நன்றி

குடியரசு தின விழாவில், 4 பேருக்கு வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கங்களை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்:முதலமைச்சருக்கு விருதாளர்கள் நன்றி

புதன், ஜனவரி 27,2016,

சென்னை கடற்கரைச் சாலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில், 4 பேருக்கு வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கங்களை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

நீலாங்கரை காவல் ஆய்வாளர் பாஸ்கர், கோ.சீனிவாசன், ரிஷி, முகமது யூனுஸ் ஆகிய 4 பேருக்கு ரூ.1 லட்சம் காசோலையும், ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள தங்க முலாம் பூசிய பதக்கமும், சான்றிதழும் வழங்கப்பட்டன.

வெள்ளத்தின்போது 1,500 பேரை காப்பாற்றிய காவல் ஆய்வாளர்: சென்னையில் அண்மையில் மழை-வெள்ளத்தின்போது தன்னார்வத் தொண்டு அமைப்புகள், உள்ளூர் மீனவர்கள் உள்ளிட்டோரின் உதவியுடன் பெத்தேல் நகரிலுள்ள இஸ்லாமிய நூருன் அமின் பாடச் சாலையில் தங்கியிருந்த 3 பெரியவர்கள், 18 சிறார்கள் உள்ளிட்ட 1,500 பேரை காப்பாற்றியதற்காக நீலாங்கரை காவல் ஆய்வாளர் பாஸ்கருக்கு அண்ணா பதக்கம் அளிக்கப்பட்டது.

கர்ப்பிணியைக் காப்பாற்றிய முகமது யூனுஸ்: சென்னையில் பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1,500 பேரை பத்திரமாக மீட்டு, 300 பேரை பாதுகாப்பான இடங்களில் சூளைமேட்டைச் சேர்ந்த முகமது யூனுஸ் தங்க வைத்தார். ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த கர்ப்பிணி சித்ராவை மருத்துவமனையிலும் சேர்த்தார். அப்போது, தனக்கு பிறந்த குழந்தைக்கு யூனுஸ் என பெயரை சித்ரா வைத்துள்ளார்.

கடலில் மூழ்கிய தம்பதியை காப்பாற்றிய..: இதேபோல், மெரினா கடலில் அடித்துச் செல்லப்பட்ட குணசேகரனையும், அவரது மனைவி பிரபாவையும் ஆலந்தூர் வட்டம் நங்கநல்லூரைச் சேர்ந்த கோ.சீனிவாசன் பத்திரமாக மீட்டதற்காகவும் இந்தப் பதக்கம் வழங்கப்பட்டது.

மரத்துண்டின் உதவியுடன் 3 பேரை காப்பாற்றிய இளைஞர்: நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு உள்பட்ட திருமுல்லைவாசல் கடற்கரையில் குளித்தபோது, பெரிய அலையால் அடித்துச் செல்லப்பட்ட அமிருதீன், சகாபுதீன், ஷமீர் பாரிஸ் ஆகியோரை இளைஞர் ரிஷி சிறிய மரத் துண்டின் உதவியுடன் காப்பாற்றினார்.

அதிராம்பட்டினம் அபுபக்கருக்கு கோட்டை அமீர் பத்தகம்: மத நல்லிணத்துக்காகப் பாடுபட்டு உயிர் நீத்த கோட்டை அமீரின் பெயரிலான மத நல்லிணக்கப் பதக்கத்தையும், ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையையும் தஞ்சாவூர் மாவட்டத்துக்குள்பட்ட அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த எம்.பி.அபுபக்கருக்கு முதல்வர் ஜெயலலிதா அளித்தார்.

ரம்ஜான் மாதத்தில் 40 நாள்களுக்கும் அனைத்து தரப்பைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம் ஏழை-எளிய மக்களுக்கு உணவு அளித்தும், அதிராம்பட்டினத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை சுமுகமாக நடத்துவதற்கும் உதவியும் புரிந்துவருவதற்காக இந்தப் பதக்கம் அளிக்கப்பட்டது.

3 பேருக்கு காந்தியடிகள் காவலர் பதக்கம்: மதுவிலக்கை தீவிரமாக அமல்படுத்தியதற்காக தஞ்சாவூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் கு.ராஜேந்திரன், நாகப்பட்டினம்-புதுப்பட்டினம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சு.ராமமூர்த்தி, தருமபுரி-ஏரியூர் காவல் நிலைய தலைமைக் காவலர் ம.ராஜூ ஆகிய 3 பேருக்கு காந்தியடிகள் காவலர் பதக்கத்தையும், ரூ.20 ஆயிரத்துக்கான காசோலையையும் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.