குடும்ப அட்டைக்கு மாற்றாக ஸ்மார்ட் கார்டு வழங்க தமிழக அரசு நடவடிக்கை:அமைச்சர் காமராஜ் தகவல்

குடும்ப அட்டைக்கு மாற்றாக ஸ்மார்ட் கார்டு வழங்க தமிழக அரசு நடவடிக்கை:அமைச்சர் காமராஜ் தகவல்

வியாழன் , பெப்ரவரி 18,2016,

காகிதத்தாலான குடும்ப அட்டைக்குப் பதிலாக, ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுவது எப்போது என்ற கேள்விக்கு உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் பதிலளித்தார்.
சட்டப் பேரவையில் இடைக்கால நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் பேசினார். அப்போது, ரேஷன் அட்டையில் உள்தாள் தொடர்ந்து ஒட்டப்படுகிறது. அந்தத் தாளை ஒட்டக் கூட இடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.
இதற்குப் பதிலளித்து அமைச்சர் ஆர்.காமராஜ் பேசியது: தமிழகம் முழுவதும் இப்போது புழக்கத்திலுள்ள காகிதத்தால் ஆன, குடும்ப அட்டைகள் கடந்த 2005 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது வழங்கப்பட்டதாகும். திமுக ஆட்சிக் காலத்தில் புதிய அட்டை கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
இப்போது நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், குடும்ப அட்டைக்குப் பதிலாக ஸ்மார்ட் கார்டு கொடுக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள் அவசியமாகும். தமிழகத்தில் 65 சதவீதம் கணக்கெடுப்புப் பணிகள் முடிந்துள்ளன. அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் ஸ்மார்ட் கார்டு வழங்கும் முயற்சி நடைபெற்று வருகிறது.
வரும் காலத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில்தான் ஸ்மார்ட் கார்டு கொடுக்கப்பட உள்ளது என்றார் அமைச்சர் காமராஜ்.