குமரி மாவட்டத்தில் மான் கொம்பு குத்தி உயிரிழந்த பூங்கா ஊழியரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

குமரி மாவட்டத்தில் மான் கொம்பு குத்தி உயிரிழந்த பூங்கா ஊழியரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

திங்கள் , மே 30,2016,

கன்னியாகுமரி மாவட்டத்தில் மான் கொம்பு குத்தியதில் பல்லுயிர் பூங்கா ஊழியர் உயிரிழந்தது குறித்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஜெயலலிதா, உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு வனத்துறை மூலம் 3 லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று முன்தினம் கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம், புலியூர்குறிச்சியில் அமைந்துள்ள உதயகிரி கோட்டை பல்லுயிர் பூங்காவில் மான்களுக்கு உணவு அளிக்க சென்ற கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம், பத்மனாபபுரம், ஆ கிராமத்தைச் சேர்ந்த திரு. குமாரசாமி பிள்ளை என்பவரின் மகன் மாதவன்பிள்ளை, மான் கொம்பினால் குத்தப்பட்டு, படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்த தாம் மிகவும் துயரம் அடைந்ததாகத் தெரிவித்துள்ளார். மான் கொம்பு குத்தியதில் உயிரிழந்த மாதவன்பிள்ளையின் குடும்பத்திற்கு தமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதா, இந்தத் துயர சம்பவத்தில் உயிரிழந்த மாதவன்பிள்ளையின் குடும்பத்திற்கு மூன்று லட்சம் ரூபாய் வனத் துறை மூலம் உடனடியாக வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.