குமரி மாவட்டத்தில் 3 இடங்களில் அம்மா மருந்தகம்:தள்ளுபடி விலையில் பொது மக்களுக்கு மருந்துகள் கிடைக்க முதல்வர் ஜெயலலிதா ஏற்பாடு

குமரி மாவட்டத்தில் 3 இடங்களில் அம்மா  மருந்தகம்:தள்ளுபடி விலையில் பொது மக்களுக்கு மருந்துகள் கிடைக்க  முதல்வர் ஜெயலலிதா ஏற்பாடு

புதன், ஜனவரி 13,2016,

கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அம்மா மருந்தகத்தை முதல்வர் ஜெயலலிதா காணொலிக்காட்சி மூலம் திறந்துவைத்தார்.இதனால், ஆரல்வாய்மொழி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசித்து வரும் சுமார் 25 ஆயிரம் மக்கள் பயன்பெறுவார்கள்.

கன்னியாகுமரி மாவட்டம், கூட்டுறவுத் துறை சார்பாக ஆரல்வாய்மொழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் திங்கள்சந்தையில் தலக்குளம், இரணியல் உழவர் பணி கூட்டுறவு கடன் சங்கம் என தலா ரூ. 10 லட்சம் மதிப்பில் 3 அம்மா மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை சென்னை, தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி மூலம் முதல்வர் திறந்துவைத்தார்.

தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண், முன்னாள் அமைச்சர் என். தளவாய்சுந்தரம், கே.டி. பச்சைமால் எம்.எல்.ஏ., ஏ. நாஞ்சில் முருகேசன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையில், ஆரல்வாய்மொழி, அம்மா மருந்தகத்தில் குத்துவிளக்கேற்றி வைத்து, கூட்டுறவு ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கினார்.

அம்மா மருந்தகத்தில், மருந்து வகைகளுக்கு 15 சதவீதம் தள்ளுபடி விலையில் பொது மக்களுக்கு வழங்கப்படும். இதனால், ஆரல்வாய்மொழி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசித்து வரும் சுமார் 25 ஆயிரம் மக்கள் பயன்பெறுவார்கள்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சித் தலைவர் எம்.எஸ். சாரதாமணி, தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினர் ஏ. ஜஸ்டின் செல்வராஜ், கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய பெருந்தலைவர் கே. பகவதிபெருமாள், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள், கன்னியாகுமரி பேரூராட்சி துணைத் தலைவர் தம்பிதங்கம், ஆரல்வாய்மொழி தொடக்க வேளாண்மை கூட்டுறவுத் தலைவர் எஸ். கிருஷ்ணகுமார், செயல் அலுவலர் ஜெ. முகமத்இக்பால் ஷெரீப் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.