குறு வியாபாரிகளுக்கு ரூ.5,000, வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.5 லட்சம் கடனுதவி: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

குறு வியாபாரிகளுக்கு ரூ.5,000, வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.5 லட்சம் கடனுதவி: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வெள்ளி , ஜனவரி 15,2016,

வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் பெட்டிக் கடைகள், தெருவோரங்களில் வியாபாரம் செய்பவர்கள் நடைபாதையில் கடை வைத்திருப்பவர்கள் போன்ற சிறு வணிகர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.5000 வட்டியில்லா கடன் வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,கடந்த வடகிழக்குப் பருவமழையின் போது ஒரு சில நாட்களில் பெய்த கன மழை காரணமாக பல மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இந்த வெள்ள பாதிப்பு மிக அதிகமானது என்பதால், மத்திய அரசு இதனை ‘மிகக் கடுமையான பேரிடர்” என அறிவித்துள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களில் பெரும்பாலானோருக்கு நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டுவிட்டது. எஞ்சியவர்களுக்கு மிக விரைவில் வெள்ள நிவாரண உதவித்தொகை வழங்கப்படும். இந்த பெருமழை வெள்ளத்தால் சிறு, குறு தொழில் முனைவோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டை வெள்ளம் பாதித்த மாநிலமாக அறிவித்து ஏற்கெனவே தமிழக அரசால் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இவர்கள் தங்களுடைய தொழிலை மீண்டும் தொடங்கும் வகையில், வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் ஏற்கெனவே வழங்கிய கடன்களுக்கு கடன் தவணையை ஒத்திவைத்தல், மறு கடன் உதவி போன்ற பல சலுகைகளை வழங்கி வருகின்றன.

வங்கிகளுடன் கலந்தாய்வு கூட்டங்கள் நடத்தி இந்தப் பணியை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி நான் தலைமை செயலாளருக்கு ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளேன். மிகச் சிறிய முதலீட்டில் அன்றாடம் பூக்கள், பழங்கள், காய்கறிகள் போன்ற பொருட்களை வாங்கி விற்பனை செய்து வரும் தெருவோர சிறு வணிகர்கள், பெட்டிக் கடைகள் நடத்துவோர், முதலீட்டை இழந்து தங்களின் வாழ்வாதாரத்திற்காக தனியாரிடம் அதிக வட்டியில் கடன் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இத்தகைய ஏழை, எளிய வணிகர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மீண்டும் பெற வகை செய்யும் ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்த நான் உத்தரவிட்டுள்ளேன்.

இதன்படி,

1. பெட்டிக் கடைகள், தெருவோரங்களில் வியாபாரம் செய்பவர்கள், நடைபாதையில் கடை வைத்திருப்பவர்கள் போன்ற சிறு வணிகர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் உதவி வழங்கப்படும். கூட்டுறவு வங்கிகள் 5,000 ரூபாய் வரை கடன் வழங்கும்.இந்தக் கடனுக்கு வட்டி எதுவும் வசூலிக்கப்படமாட்டாது. அதாவது, சிறு வணிகர்களுக்கு 5,000 ரூபாய் வரை வட்டி எதுவுமில்லாமல் கடன் வழங்கப்படும். கூட்டுறவு வங்கிகளுக்கு வட்டியாக 11 சதவீதத்தை தமிழ்நாடு அரசு வழங்கும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்கள் இந்தக் கடனை 25 வாரங்களில் வாரந்தோறும் ரூ.200 என்ற அடிப்படையில் திருப்பிச் செலுத்த வேண்டும்.குறித்த காலத்தில் கடனை திருப்பி செலுத்துபவர்களுக்கு, மீண்டும் அதே அளவு கடன் தொகையை குறைந்த வட்டியான 4 சதவீதத்தில் வழங்கிடவும் நான் உத்தரவிட்டுள்ளேன். சிறு வணிகர்களுக்கு இவ்வாறு கடன் வழங்குவதற்கென கூட்டுறவு வங்கிகள் சிறப்பு முகாம்களை நடத்தும். 10 நாட்கள் நடைபெறும் இந்த சிறப்பு முகாம்களில், பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர்.

2. வேலையற்ற பட்டதாரிகளின் வேலை உறுதித்திட்டத்தின் கீழ் சிறு தொழில்களுக்கு 25 சதவீத மூலதன மானியத்துடன் ஐந்து லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கும் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி ஆண்டுக்கு 5,000 இளைஞர்களுக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது. வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் உள்ள தகுதியான இளைஞர்கள் அனைவருக்கும் இத்திட்டத்தின்படி 25 சதவீத மூலதன மானியத்துடன் ஐந்து லட்சம் ரூபாய் வரையிலான கடன் வழங்கிட நான் உத்தரவிட்டுள்ளேன். இத்திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட பயிற்சி பெறப்பட வேண்டும் என்ற நிபந்தனையிலிருந்தும் விலக்கு அளித்து உடனடியாக கடன் வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

3. வெள்ள பாதிப்பால் சிறு குறு தொழில்களின் மின்சார மீட்டர்கள் பழுதாகியுள்ளன என்றும் அதற்கு பதிலாக புதிய மீட்டர் பொருத்த மின்வாரியத்திற்கு செலுத்த வேண்டிய கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கைகள் வரப் பெற்றுள்ளன.இக்கோரிக்கைகளை ஏற்று, வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் வெள்ளத்தால் பழுதாகியுள்ள மின்சார மீட்டர்களுக்கு மாற்றாக புதிய மின்சார மீட்டர் பொருத்தும் செலவை மின்வாரியமே ஏற்று புதிய மீட்டர்கள் பொருத்தப்பட வேண்டும் என நான் ஆணையிட்டுள்ளேன். உயர் மின்னழுத்த மீட்டர் ஒன்றுக்கு 26,000 ரூபாய், குறைந்த மின்னழுத்த மீட்டர் ஒன்றுக்கு 3,500 ரூபாய் என மின் வாரியத்திற்கு செலுத்தப்பட வேண்டிய கட்டணத்தை வெள்ளம் பாதித்த சிறு, குறு தொழிலகங்கள் செலுத்த வேண்டியதில்லை. இந்தச் செலவை மின்வாரியமே ஏற்கும்.

4. தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்திடமிருந்து நிதி உதவி பெற்றுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு கீழ்க்கண்ட சலுகைகள் வழங்க நான் ஆணையிட்டுள்ளேன்:–
அ) கடன் அசல் தொகையை திரும்பச் செலுத்துவதற்கு தேவை அடிப்படையில் 1 ஆண்டு முதல் 2 ஆண்டுகள் வரை விடுமுறைக் காலம் வழங்கப்படும்.
ஆ) ஆறு மாதங்களுக்கான வட்டியை திரும்பச் செலுத்த உதவிடும் வகையில் தற்காலிகக் கடன் உதவி வழங்கப்படும்.
இ) பழுது ஏற்பட்ட தளவாடங்கள், இயந்திரங்கள் போன்றவற்றை சரி செய்யவும் மற்றும் புதிய இயந்திரங்கள் வாங்கிடவும் தேவை அடிப்படையில் கூடுதல் கடன் வழங்கப்படும்.
ஈ) நடைமுறை மூலதனக் கடனை திருப்பிச் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு மற்றும் புதிதாக மூலப் பொருட்கள் இருப்பை அதிகரிக்கத் தேவையான கூடுதல் கடன் வழங்கப்படும்.
உ) இக்கடன்கள் கூடுதல் பிணையம் எதுவும் இன்றி வழங்கப்படும்.
ஊ) இந்தக் கடன்கள் எல்.எல்.பி.சி. பரிந்துரையின்படி, அடிப்படை வட்டி விகிதத்தில் வழங்கப்படும்.
எ) வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் 31.10.2015 வரை கடனை உரிய காலத்தில் திருப்பி செலுத்தி இருப்பின் அவர்களுக்கு ஆறு மாதங்கள் வரை அல்லது பாதிப்புக்குள்ளான தொழிலை முழுமையாகத் தொடங்கும் வரை, இரண்டில் எது முன்னரோ அதுவரை அபராத வட்டியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

5. சிறு தொழில் மேம்பாட்டு கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தொழிற்பேட்டைகளில், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீரமைக்கும் பணிகள் 25 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட நான் ஆணையிட்டுள்ளேன். எனது இந்த நடவடிக்கைகளின் மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு, குறு தொழில்முனைவோர் மற்றும் சிறு வணிகர்கள் பெரிதும் பயன் பெறுவர். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.