குறைந்த விலையில், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில் விற்பனை நீடிப்பு ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை,

முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பருப்பு வகைகள் மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவற்றின் விலை வெளிச்சந்தையில் அதிகமாக உள்ள காரணத்தால், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவை மிகக் குறைந்த விலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம்  வழங்கப்பட்டு வருகின்றன.  துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு ஆகியவை கிலோ 30 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் பாமாயில் 25 ரூபாய்க்கும் வழங்கப்படுகிறது.  பொது விநியோகத் திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவை 30.9.2015 வரை  வழங்கிட நான் கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தேன்.

வெளிச் சந்தையில் பருப்பு வகைகள் மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவற்றின் விலை உயர் அளவில் உள்ளதால், ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நலன் கருதி நியாய விலைக் கடைகளில், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் பாமாயில் வழங்கிடும் இந்த சிறப்பு பொது விநியோகத் திட்டத்தினை மேலும் ஓராண்டுக்கு அதாவது 30.9.2016 வரை நீட்டிக்க நான் உத்தரவிட்டுள்ளேன். இதன் படி ஒரு கிலோ துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு தலா 30 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் பாமாயில் 25 ரூபாய்க்கும் தொடர்ந்து வழங்கப்படும்.
நியாய விலைக் கடைகள் மூலம் குறைந்த விலையில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் பாமாயில் வழங்கிடும் இத்திட்டத்திற்கென தமிழக அரசுக்கு ஆண்டிற்கு 2,000 கோடி ரூபாய் செலவு ஏற்படும். இவ்வாறு அதில் கூறியுள் ளார்.