குழந்தை தொழிலாளர்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்கிடுவோம்; முதல்வர் ஜெயலலிதா

குழந்தை தொழிலாளர்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்கிடுவோம்; முதல்வர் ஜெயலலிதா

ஞாயிறு, ஜூன் 12,2016,

முதலமைச்சர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள குழந்தைத்தொழிலாளர் முறை எதிர்ப்பு தினச்செய்தியில் கூறியிருப்பதாவது:-

உலகெங்கும் குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் நாள் ‘‘குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்’’ கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

குழந்தை பருவமானது துள்ளி திரிந்து விளையாடி, பள்ளிக்கு சென்று கல்வி கற்கும் இனிய பருவமாகும். இக்குழந்தைப் பருவத்தில், குழந்தைத் தொழிலாளர் என்ற கொடுமைக்கு ஆட்படுத்தப்படும் எந்த ஒரு குழந்தையையும் விடுவித்து, அவர்களுக்கு இனிமையான குழந்தைப் பருவத்தினையும், முறையான கல்வியினையும் வழங்கிட வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.

தமிழ்நாட்டில் குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக ஒழித்திடும் வகையில், குழந்தைத் தொழிலாளர்களை மீட்டெடுத்து சிறப்புப் பயிற்சி மையங்களில் கல்வி அளித்தல், குழந்தைகள் தரமான கல்வி கற்றிடவும், பெற்றோர்களின் சுமைகளைக் குறைத்திடவும், கட்டணமில்லா கல்வி, விலையில்லா பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், புத்தகப் பை, சீருடைகள், சத்தான மதிய உணவு, காலணிகள், பேருந்து பயண அட்டைகள், மிதி வண்டிகள், மடிக்கணினிகள் என எண்ணற்ற உதவிகள் வழங்கப்படுவதுடன், உயர்கல்வி பயிலும் முன்னாள் குழந்தைத் தொழிலாளர்களுக்கு 500 ரூபாய் மாதாந்திர உதவித் தொகை வழங்குதல் போன்ற திட்டங்களையும் எனது தலைமையிலான அரசு கடந்த ஐந்து ஆண்டுகளாக சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

குழந்தை தொழிலாளர்கள் உழைப்பின் மூலம் பெறப்படும் வருமானம் வீட்டிற்கும், நாட்டிற்கும் சிறுமை என்பதை உணர்ந்து, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி அழிவில்லா கல்விச் செல்வம் அவர்களுக்கு கிடைக்கச் செய்திடுவோம். குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடுவோம். குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றுவோம்! அவர்தம் வாழ்வில் கல்வி எனும் ஒளியேற்றுவோம்!  இவ்வாறு அந்த அறிக்கையில் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.