கெயில் எரிவாயு திட்டம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மறு சீராய்வு மனு தாக்கல்

கெயில் எரிவாயு திட்டம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மறு சீராய்வு மனு தாக்கல்

திங்கள் , பெப்ரவரி 08,2016,

தமிழகத்தில் விவசாய நிலங்களில் எரிவாயு குழாய்களைப் பதிக்கும் கெயில் எரிவாயு திட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து பிறப்பித்த தீர்ப்பை மறுசீராய்வு செய்யக் கோரி தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

தமிழக அரசு தாக்கல் செய்த மறு சீராய்வு மனுவில், கெயில் எரிவாயு திட்டம் செயல்படுத்தும்பட்சத்தில் சுமார் 1.2 லட்சம் மரங்களை வெட்ட வேண்டிய நிலை ஏற்படும்.

விவசாய நிலங்களைத் தவிர்த்து எரிவாயு குழாய்களை சாலையோரம் பதிக்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர் உள்பட கொங்கு மண்டலத்தின் விளை நிலங்கள் வழியாக கெயில் நிறுவனத்தின் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்தத் திட்டத்தை விவசாய நிலங்கள் வழியாகச் செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில், கெயில் எரிவாயு திட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

இது, கொங்கு மண்டலப் பகுதியில் உள்ள விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றத்தின் அனுமதியை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வேண்டுகோள் விடுத்தனர்.

விவசாயிகள் உள்ளிட்ட பல தரப்பினரின் வேண்டுகோளை ஏற்று, உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் மீது தமிழக அரசின் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் வியாழக்கிழமை (பிப். 4) ஆலோசனை நடத்தப்பட்டது.

அப்போது, சீராய்வு மனு தாக்கல் செய்ய அறிவுறுத்திய முதல்வர் ஜெயலலிதா, அதில் எடுத்துரைக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து அறிவுரையும் வழங்கினார். இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் இன்று தமிழக அரசின் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.