கேரளாவில் கம்யூனிஸ்டு கட்சியினர் தாக்கியதில் மரணமடைந்த அ.தி.மு.க. பிரமுகரின் குடும்பத்துக்கு முதல்வர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல்

கேரளாவில் கம்யூனிஸ்டு கட்சியினர் தாக்கியதில் மரணமடைந்த அ.தி.மு.க. பிரமுகரின் குடும்பத்துக்கு முதல்வர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல்

திங்கள் , மே 30,2016,

கேரள மாநிலம், உடும்பன்சோழா சட்டமன்றத் தொகுதி, மஞ்சப்பட்டியைச் சேர்ந்த அ.இ.அ.தி.மு.க. தொண்டர் திரு. ஆர். சுந்தரம் என்பவரை கம்யூனிஸ்ட் கட்சியினர், கடுமையாகத் தாக்கி படுகாயப்படுத்தியதால் மரணமடைந்தது குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். திரு. சுந்தரத்தின் குடும்பத்திற்கு, குடும்ப நல நிதியுதவியாக, 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கேரள மாநிலம், உடும்பன்சோழா சட்டமன்றத் தொகுதி, மஞ்சப்பட்டியைச் சேர்ந்த கழக உடன்பிறப்பு திரு. ஆர். சுந்தரம் என்பவரை கம்யூனிஸ்ட் கட்சியினர், தேர்தல் முன்விரோதத்தில், கடுமையாகத் தாக்கி படுகாயப்படுத்தியதன் காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். இதற்கு தமது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அன்புச் சகோதரர் திரு. ஆர். சுந்தரத்தை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாகவும், மேலும் அவரது குடும்பத்திற்கு கழகத்தின் சார்பில் குடும்பநல நிதியுதவியாக 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.