கேரளா, கர்நாடகா மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் எதிரொலி ; தமிழக எல்லைப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

கேரளா, கர்நாடகா மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் எதிரொலி ; தமிழக எல்லைப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

வெள்ளி, நவம்பர் 25,2016,

கேரளா, கர்நாடகா மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதை அடுத்து, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, தமிழக எல்லைப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, அனைத்து வாகனங்களும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்ட பின்னரே, தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன.

கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியில் பறவை காய்ச்சல் நோய் பரவி உள்ளதை தொடர்ந்து, இந்நோய் தமிழகத்தில் பரவுவதை தடுக்க, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அதன் ஒருபகுதியாக, கன்னியாகுமரி மாவட்டத்தில், தமிழக – கேரள எல்லையான படந்தாலுமூடு, களியக்காவிளை ஆகிய பகுதிகளில், சிறப்பு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக, கால்நடைத்துறை அதிகாரிகள் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும், கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்ட பின்னரே, தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன. இப்பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் திரு. சஜ்ஜன்சிங் சவான், இதுவரை 3,400 வாகனங்களுக்கு கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் அறிகுறி எதுவும் இல்லை எனவும் தெரிவித்தார்.