கோவை, நீலகிரி மாவட்டங்களில் நிறைவேற்றப்பட்ட முக்கிய திட்டங்கள்: கோவை பொதுக்கூட்டத்தில்முதல்வர் ஜெயலலிதா பட்டியல்

கோவை, நீலகிரி மாவட்டங்களில் நிறைவேற்றப்பட்ட முக்கிய திட்டங்கள்: கோவை பொதுக்கூட்டத்தில்முதல்வர் ஜெயலலிதா பட்டியல்

திங்கள் , மே 02,2016,

கோவை மற்றும் நீலகிரியில் நிறைவேற்றப்பட்ட முக்கிய திட்டங்கள் குறித்து கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா பட்டியலிட்டு பேசினார்.

இது குறித்து கோவை கொடிசியா மைதானத்தில் முதலமைச்சரும் அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா அளித்த பட்டியல் வருமாறு:

கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் நிறைவேற்றப்பட்ட சில முக்கியப் பணிகளைப் பற்றி இங்கே தெரிவிக்க  விரும்புகிறேன். நீலகிரி மாவட்டத்தில் சில்லஹல்லா நீரேற்று புனல் மின் திட்டம் செயல்படுத்திட சில்லஹல்லா அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை மற்றும் ஒப்பந்தப் புள்ளிகள் தயாரிப்பதற்கான பணி தொடங்கப்பட்டுள்ளது. மின்  நிலையம் அமைப்பதற்கான ஆய்வுப் பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகள்  தமிழ்நாடு மின் வாரியத்தால் திறக்கப்பட்டுள்ளன. காற்றாலை மின்  நிலையங்களிலிருந்து மின்சாரத்தை வெளியேற்ற 1,300 கோடி ரூபாய் மதிப்பில் 3  துணை மின் நிலையங்கள், உயர் மின் அழுத்தப் பாதை ஆகியவற்றை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது விரைவில் முடிவடையும்.

கோயம்புத்தூரில் மூன்றாவது டைசல் பயோ பார்க் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. கோயம்புத்தூர் டைடல் பார்க்கில் சிறிய மற்றும் நடுத்தர  தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உடனடியாக தொழில் துவங்க ஏதுவாக,  அபிவிருத்தி மையம் ஒன்று நிறுவப்பட்டு வருகிறது. முதற்கட்ட பணிகள் விரைவில்  முடிக்கப்பட்டு 300 சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்படும்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 7 பேரூராட்சிகள் மற்றும் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த 134 ஊரகக் குடியிருப்புகள் பயன் பெறும் கையிலான ஒரு கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் 130 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று  வருகின்றன. இன்னும் பத்து மாத காலத்திற்குள் இந்தப் பணிகள் முடிவடையும்.  காரமடை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 185 ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம் முடிவடையும் நிலையில் உள்ளது. கோயம்புத்தூர் மாநகராட்சியின் எல்லை விரிவாக்கத்திற்கு முன்பிருந்த பகுதிகளுக்கான பில்லூர் இரண்டாவது குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் தண்ணீர் கிடைக்கும் வகையில் 556 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டத்திற்கு விருப்பம் கோரும்  ஒப்பந்தப் புள்ளிகள் பெறப்பட்டுள்ளன. இத்திட்டம் விரைவில் துவங்கப்படும்.

நீலாம்பூரில் ரயில்வே மேம்பாலம்; போத்தனூர்-மதுக்கரை ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில்வே மேம்பாலம்; நொய்யல் ஆற்றின் குறுக்கே மேம்பாலங்கள்  ஆகியவை கட்டப்பட்டுள்ளன. காந்திபுரம் பகுதியில் இரண்டடுக்கு மேம்பாலம்  அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பல்லடம் நகராட்சி, 23 பேரூராட்சிகள் மற்றும் 8 ஊராட்சி ஒன்றியங்களுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம் குடிமங்கலம் மற்றும் உடுமலைப்-பேட்டைக்கான குடிநீர் மேம்பாட்டு திட்டம்  ஆகியவை 279 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளன. பொதுப் பணித் துறை வாயிலாக 20 இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. 7 இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன. பரம்பிக்குளம் ஆழியாறு உட்பட 8  அணைகளின் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.  இவ்வாறு முதலமைச்சர் ஜெயலலிதா பேசினார்