2 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாகத்தை முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

2 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாகத்தை முதலமைச்சர் ஜெயலலிதா  திறந்து வைத்தார்

திங்கள் , பெப்ரவரி 01,2016,

முதலமைச்சர் ஜெயலலிதா, தலைமைச் செயலகத்தில், வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில், கோயம்புத்தூரில் 1 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாகக் கட்டடத்தை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார். மேலும், 20 கோடியே 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டடங்கள், வணிகவரி அலுவலகக் கட்டடங்கள், வணிகவரி சோதனைச் சாவடி கட்டடம், சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள் ஆகியவற்றை திறந்து வைத்து, 179 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான ஒருமுகப்படுத்தப்பட்ட கணினிவழி தீர்வு திட்டத்தை முதலமைச்சர் துவக்கி வைத்தார்.

வாடகை கட்டடங்களில் இயங்கி வரும் பதிவுத் துறை அலுவலகங்களில், பதிவு ஆவணங்களைப் பராமரிப்பதற்கும், பணியாளர்கள் திறம்படப் பணியாற்றுவதற்கும், போதிய இடவசதி இல்லாததை கருத்தில் கொண்டும், பொதுமக்கள் அதிகம் வந்து செல்கின்ற சார்பதிவாளர் அலுவலகங்களில் பொதுமக்களுக்கு தக்க வசதிகள் அளிக்கப்பட வேண்டியதன் அவசியத்தைக் கருதியும், சிறிய இடங்களுக்கு அதிக அளவில் வாடகை தர வேண்டிய நிலையினை தவிர்த்திடவும், பதிவுத்துறையில் வாடகை கட்டடங்களில் இயங்கி வரும் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு சொந்த கட்டடங்கள் கட்டும் திட்டத்தினை முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், கோயம்புத்தூரில் 13 ஆயிரத்து 558 சதுர அடி கட்டட பரப்பளவில், 1 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், தரை மற்றும் இரண்டு தளங்களுடன், கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாகக் கட்டடத்தை, தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாக முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

மேலும், திண்டுக்கல்லில் 2 கோடியே 58 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பதிவுத் துறை வளாகக் கட்டடம்;

சென்னை தியாகராய நகர், திண்டுக்கல் மாவட்டம் நத்தம், வத்தலக்குண்டு மற்றும் சாணார்பட்டி, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை, தேனி மாவட்டம் தேவாரம், இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் மற்றும் தொண்டி, திருப்பூர் மாவட்டம் நல்லூர், விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி, சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி, சேலம் மாவட்டம் தம்மம்பட்டி மற்றும் சேலம் மேற்கு 3 எண் இணை சார்பதிவாளர் அலுவலகம்;

தருமபுரி மாவட்டம் மொரப்பூர், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி, வேப்பனப்பள்ளி மற்றும் பாரூர், கடலூர் மாவட்டம் நல்லூர் மற்றும் சிறுபாக்கம், திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம், திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு, தஞ்சாவூர் மாவட்டம் இரண்டாம்புலிக்காடு ஆகிய இடங்களில் 12 கோடியே 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள்;

கன்னியாகுமரி மாவட்டம் வாள்வச்சகோஷ்டம் மற்றும் அரியலூர் மாவட்டம் அரியலூர் ஆகிய இடங்களில் 2 கோடியே 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டடங்கள்;

வேலூர் மாவட்டம் ஆற்காடு மற்றும் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் 1 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வணிகவரி அலுவலகக் கட்டடங்கள்;

திருநெல்வேலியில் 1 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வணிகவரித் துறை பணியாளர் பயிற்சி நிலையக் கட்டடம்; கோயம்புத்தூர் மாவட்டம் மீனாட்சிபுரத்தில் 29 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வணிகவரி சோதனைச் சாவடி கட்டடம்; என மொத்தம் 21 கோடியே 76 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வணிகவரி மற்றும் பதிவுத் துறை கட்டடங்களை முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

வணிகவரித் துறையில் மின்னணு ஆளுகை முறைகளைப் புகுத்துவதன் அவசியத்தை கருத்தில் கொண்டு, இத்துறையில் முழுமையாக மின்னணு ஆளுகை முறைகளைக் கொண்டு வர ஏதுவாக மென்பொருள், வன்பொருள் ஆகியவற்றின் தேவைகளை முழுமையாக நிறைவு செய்திடும் நோக்கிலும், இதன் மூலம் வரி நிர்வாகத்தில் உள்ள சேவையின் தரம் கணிசமான அளவு உயர்வதோடு வரி ஏய்ப்பு தடுக்கப்பட்டு, வரி செலுத்துவோருக்குத் தேவையான சேவை குறுக்கீடின்றி எளிதாகக் கிடைக்க வழிவகைகள் செய்யப்படும் என்று 2011-2012ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, வணிகவரித் துறையின் மூலம் 179 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் e-CTAX எனப்படும் வணிகர்களின் தேவைகளை மையப்படுத்தியும், துறையின் வரி நிர்வாகத்தை மேம்படுத்தவும், வளர்ந்து வரும் தகவல் தொழில் நுட்பத்தின் உதவியுடன், துறையின் (Total Solution Project) எனப்படும் முழுமையான கணினிவழி தீர்வு திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.

இத்திட்டத்தின் மூலம், வணிகவரித் துறையில் உள்ள 554 அலுவலகங்களுக்கு தேவையான கணினி வசதிகளுடன் கூடிய இரட்டை இணையதள தொடர்பு வசதிகள் கொடுக்கப்பட்டு, மாநில தகவல் தரவு மையத்தில் இணைக்கப்பட்டுள்ளது. துறை சார்ந்த அனைத்து மென்பொருள்களும் டாடா கன்சல்டன்சி நிறுவனத்தின் மூலமாக நிறுவப்பட்டு, பதிவுச் சான்றிதழ், மாதாந்திர நமூனாக்கள், C-படிவம் மற்றும் இதரபடிவங்கள், சோதனைச் சாவடிச் சேவைகள் மற்றும் இதர சேவைகளை இணையதளம் மூலமாக அறிமுகப்படுத்தப்படும்.

மேலும், வணிகர்களின் அனைத்து சேவைகளுக்கான விண்ணப்பம், வணிகவரித் துறை கேட்கும் கூடுதல் விவரங்களுடன் பதில், இறுதி ஆணைகள், துறை அனுப்பும் அறிவிப்புகள் போன்ற அனைத்தும் இணையதளம் மூலமாகவே கிடைக்கும். இத்திட்டத்தின் மூலம், எல்லா சேவைகளும் கணினிவழியாக அவர்கள் இருப்பிடத்திலேயே வழங்கப்படுவதால், வணிகர்கள் வணிகவரித் துறை அலுவலகங்களுக்கு நேரடியாக செல்லவேண்டியது தவிர்க்கப்படும். வணிகர்கள் இணையதள சேவை மூலம் வரித்திருப்புகை பெற வசதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், வாகனங்கள் சோதனைச் சாவடியில் தடையின்றி செல்ல ஏதுவாக, அனுப்பப்படும் பொருட்கள் பற்றிய விவரங்களை முன்கூட்டியே வலைதளத்தில் பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் இயங்கும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 103 6751-ல் மாநில சேவை மையம் செயல்படும். இதன் மூலம், வணிகர்கள் எந்நேரமும் இச்சேவைகள் குறித்த விவரங்களையும், ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ளலாம்.

வணிகவரித் துறையின் செயல்பாடுகள் தடையின்றி நடைபெறுவதற்கும், வரிவசூல் சிறப்பாக நடைபெறவும், 44 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட 8 ஜீப்புகளை, வணிகவரித் துறை செயலாக்கப் பிரிவின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் திரு.எம்.சி.சம்பத், தலைமைச் செயலாளர் திரு.கு.ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன், வணிகவரி மற்றும் பதிவுத் துறை முழு கூடுதல் பொறுப்பு வகிக்கும் முதன்மைச் செயலாளர் திரு. முகமது நசிமுத்தின், வணிகவரி ஆணையரும், முதன்மைச் செயலாளருமான திரு.எஸ்.கே. பிரபாகர், பதிவுத் துறை தலைவர் திரு.சு. முருகய்யா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.