சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் இன்று காலை 10 : 30 மணிக்கு தீர்ப்பு

சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் இன்று காலை 10 : 30 மணிக்கு  தீர்ப்பு

செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 14, 2017,

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா உள்ளிட்டோர் தொடர்புடைய சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று காலை 10 : 30 மணிக்கு வழங்க உள்ளது.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற இணையதளத்தில் திங்கள்கிழமை மாலை வெளியிடப்பட்டுள்ள வழக்குகள் விசாரணைப் பட்டியலில் சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு தீர்ப்பை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திர கோஸ், அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு வழங்க உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கர்நாடக அரசின் சார்பில் மூத்த வழக்குரைஞர் சித்தார்த் லூத்ரா வாதிடுகையில், விசாரணை நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், சொத்துகளை மதிப்பிட்டதில் கணக்கீட்டு பிழைகள் இருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து, அரசுத் தரப்பும், குற்றம்சாட்டப்பட்டோர் தரப்பும் எழுத்துப்பூர்வ வாதத்தை கடந்த ஆண்டு ஜூன் 10-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு தொடர்பான தீர்ப்பை கடந்த ஆண்டு ஜூன் 7-ஆம் தேதி மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கை விசாரித்து தீர்ப்பை ஒத்திவைத்துள்ள நீதிபதி பினாகி சந்திர கோஸ் தலைமையிலான அமர்வு முன் கர்நாடக அரசின் சார்பில் மூத்த வழக்குரைஞர் துஷ்யந்த் தவே கடந்த வாரம் ஆஜராகி, “மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு பல மாதங்கள் ஆகின்றன. குற்றம்சாட்டப்பட்ட முதலாவது நபராக இருந்த ஜெயலலிதா உயிரிழந்துவிட்டார். ஒரு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு நீண்ட காலம் ஆகிறது என்று நீதிமன்றத்திடம் நினைவூட்டும் நிலைக்கு நான் தள்ளப்பட்டுள்ளது கவலை அளிக்கிறது’ என்றார்.
இதைக் கேட்ட நீதிபதி பினாகி சந்திர கோஸ், “மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை தயாரிக்கும் பணி இறுதிக்கட்டத்தில் உள்ளது. எனவே, ஒரு வாரம் காத்திருங்கள்’ என்று கூறினார். இந்நிலையில், மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு இன்று காலை 10 : 30 மணிக்கு அளிக்கப்படவுள்ளது.