சசிகலா முதல்வராவதை ஏற்க முடியாது : தீபா பேட்டி

சசிகலா முதல்வராவதை ஏற்க முடியாது : தீபா பேட்டி

செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 07 , 2017,

சென்னை : ஒருவருடன் 33 ஆண்டுகளாக இருந்தது, முதல்வருக்கான தகுதியில்லை. சசிகலா முதல்வராகத் தேர்வானதை ஏற்க முடியாது என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார்.

இது தொடர்பாக சென்னை தி.நகரில் செய்தியாளர்களிடம் தீபா கூறியதாவது:

”முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பதை விளக்க வேண்டும். நேற்று மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை குறித்து விளக்கியது ஏற்றுக்கொள்ளும்படியாகவும், போதுமானதாகவும் இல்லை. இரண்டு மாதங்கள் கழித்து மருத்துவர்கள் விளக்கம் அளித்தது ஏன்? என்ற சந்தேகம் உள்ளது.

இதுவரை நான் என்ன செய்தேன் என்று கேட்டால், அதற்கு என்னிடம் பதில் இல்லை. ஆனால், ஜெயலலிதா விட்டுச் சென்ற பணியைத் தொடரவே நான் அரசியலுக்கு வந்தேன்.மக்கள் எனக்கு பெரும் ஆதரவு அளித்து வருகின்றனர். தொண்டர்கள் அழைப்பின் பேரில்தான் அரசியலுக்கு வந்தேன். ஆசியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே என் குறிக்கோள்.

நான் தொடர்ந்து அரசியலில் பணியாற்றுவேன். தேர்தலில் போட்டியிடுவேன். வரும் 24-ம் தேதி அன்று ஒரு முக்கிய முடிவை அறிவிக்க உள்ளேன்.உண்மைக்குப் புறம்பாக சசிகலா செயல்படுகிறார். ஒருவருடன் 33 ஆண்டுகளாக இருந்தது, முதல்வருக்கான தகுதியில்லை. சசிகலா முதல்வராகத் தேர்வானதை ஏற்க முடியாது. சசிகலா முதல்வரானால் தமிழகத்தில் நிலையற்ற தன்மை தொடரும். சசிகலாவைக் கண்டு எனக்கு எந்தப் பயமும் இல்லை.இவ்வாறு  தீபா கூறினார்.