சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. மகத்தான வெற்றி அடையும்:அதிமுக மாவட்ட அலுவலகங்களை திறந்து வைத்து முதல்வர் ஜெயலலிதா பேச்சு

சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. மகத்தான வெற்றி அடையும்:அதிமுக மாவட்ட அலுவலகங்களை திறந்து வைத்து முதல்வர் ஜெயலலிதா பேச்சு

வியாழன் , ஜனவரி 14,2016,

சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும் என்று முதல்வரும், கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இத்தகைய வெற்றியை அடைந்திட அனைவரும் முழு ஈடுபாட்டோடு தேர்தல் பணியாற்றிட வேண்டும் எனவும் அவர் கட்சியினரை கேட்டுக் கொண்டுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விழுப்புரம் தெற்கு, நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. அலுவலகங்கள், அதன் வளாகங்களில் நிறுவப்பட்டுள்ள எம்.ஜி.ஆர். உருவச்சிலைகளை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:–

தமிழக மக்களின் நலன்களைக் காப்பதற்காக, எம்.ஜி.ஆர். உருவாக்கிய இயக்கமான அதிமுக, இன்னும் பல நூறு ஆண்டுகள் மக்கள் பணி ஆற்றப் போகின்ற இயக்கமாக விளங்கும். மக்களுக்காக எம்.ஜி.ஆரால் ஆரம்பிக்கப்பட்ட அதிமுகவை, என் உயிரினும் மேலாக மதித்து கட்டிக் காத்து வருகிறேன்.
காலத்தின் தேவைக்கேற்ப தலைமைக் கழக அலுவலகம் நவீனம் பெற வேண்டும் என்று பெருமுயற்சி எடுத்து, 1998-ஆம் ஆண்டு இந்த தலைமை அலுவலகத்தைப் புதுப்பித்தேன். இதுபோலவே, கட்சி அமைப்பு ரீதியாகச் செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட அலுவலகங்கள் இருப்பது மிகவும் இன்றியமையாதது என்று கருதியதால், மாவட்ட அலுவலகங்களைக் கட்டி முடிக்க நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருந்தேன். கோவை, விழுப்புரம் வடக்கு, தருமபுரி, புதுச்சேரி ஆகிய இடங்களில் மாவட்ட அலுவலகங்கள் சொந்தக் கட்டடங்களில் இயங்கி வருகின்றன.
ஆறு இடங்களில் திறப்பு: விழுப்புரம் தெற்கு, நாமக்கல், கரூர், தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் கட்டி முடிக்கப்பட்டிருக்கும் மாவட்ட அலுவலகங்களையும் அவை அமைந்துள்ள வளாகங்களில் நிறுவப்பட்டுள்ள எம்.ஜி.ஆரின் சிலைகளையும் திறந்து வைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
மற்ற மாவட்டங்களிலும், கட்சிக்கென மாவட்ட அலுவலகங்கள் கட்டப்படுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதையும் அறிவேன். அவற்றையும் விரைவில் திறந்து வைக்க வேண்டும் என்பது எனது விருப்பம். இந்தப் புதிய ஆண்டின் முதல் நிகழ்ச்சியாக இந்த இனிய நிகழ்ச்சி நடைபெறுவதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில், அதிமுக அடையப் போகும் மகத்தான வெற்றிக்கு முன்னோடியாக இன்றைய நிகழ்ச்சி அமைந்துள்ளது. அத்தகைய வெற்றியினை அடைந்திட அனைவரும் முழு ஈடுபாட்டோடு தேர்தல் பணியாற்றிட வேண்டும் என்று ஜெயலலிதா பேசினார்.
உற்சாக வரவேற்பு: தலைமை அலுவலகத்துக்கு வந்த முதல்வர் ஜெயலலிதாவை
வரவேற்கும் வகையில், சாலையின் இரு மருங்கிலும் கழகக் கொடித் தோரணங்களும், வரவேற்புப் பதாகைகளும் அமைக்கப்பட்டிருந்தன. பேண்டு வாத்தியங்களும், இசைக் கருவிகளும் முழங்க, அண்ணா தொழிற்சங்கக் கொடிகளையும் கைகளில் ஏந்தியபடி வரவேற்பு அளித்தனர்.