சட்டப்பேரவை தேர்தல்களில் போட்டியிட விரும்பும் அ.இ.அ.தி.மு.க.வினருக்கான விருப்ப மனு இரண்டாவது நாளாக இன்றும் விநியோகம் – விண்ணப்பங்களை பெற குவிந்த தொண்டர்கள்

சட்டப்பேரவை தேர்தல்களில் போட்டியிட விரும்பும் அ.இ.அ.தி.மு.க.வினருக்கான விருப்ப மனு இரண்டாவது நாளாக இன்றும் விநியோகம் – விண்ணப்பங்களை பெற குவிந்த தொண்டர்கள்

வியாழக்கிழமை, ஜனவரி 21, 2016,

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டப்பேரவை பொதுத்தேர்தல்களில் போட்டியிட விரும்பும் அ.இ.அ.தி.மு.க.வினருக்கான விருப்ப விண்ணப்பப் படிவ விநியோகம் இன்று இரண்டாவது நாளாக சென்னையில் உள்ள தலைமைக் கழகத்தில் நடைபெறுகிறது. இதனைப் பெற்றுக்கொள்ள இன்றும் ஏராளமான தொண்டர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா, ஏற்கெனவே வெளியிட்டிருந்த அறிவிப்பின்படி, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பேரவை பொதுத்தேர்தல்களில் அ.இ.அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்பும் அ.இ.அ.தி.மு.க.வினருக்கான விருப்ப விண்ணப்பப் படிவங்கள் நேற்று முதல் சென்னை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக அலுவலகத்தில் விநியோகம் தொடங்கியது. கழக அவைத் தலைவர் திரு. இ. மதுசூதனன் விருப்ப விண்ணப்ப விநியோகத்தைத் தொடங்கி வைத்தார்.

முதல் நாளிலேயே தமிழகம் முழுவதிலிமிருந்து தொண்டர்கள் விருப்ப விண்ணப்பங்களை வாங்கிச் சென்றனர். முதலமைச்சர் ஜெயலலிதா தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என அவர்கள் விருப்பம் தெரிவித்திருந்தனர். இன்று இரண்டாவது நாளாக விண்ணப்ப விநியோகம் நடைபெற்று வருகிறது. இதனைப் பெற்றுக்கொள்ள காலையிலிருந்தே ஏராளமான தொண்டர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர்.

அடுத்த மாதம் 3-ம் தேதி புதன்கிழமை வரை, தினமும் காலை 10.30 மணி முதல், மாலை ஐந்து மணி வரை, உரிய கட்டணத் தொகை செலுத்தி விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து, தலைமைக் கழகத்தில் வழங்கலாம் என முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்திரிந்தார்.

தமிழ்நாட்டில் போட்டியிட விரும்பும் கழக உடன்பிறப்புகள், கட்டணத் தொகையாக 11 ஆயிரம் ரூபாயும், புதுச்சேரியில் போட்டியிட விரும்பும் கழக உடன்பிறப்புகள் 5 ஆயிரம் ரூபாயும், கேரளாவில் போட்டியிட விரும்பும் கழக உடன்பிறப்புகள் 2 ஆயிரம் ரூபாயும் தலைமைக் கழகத்தில் செலுத்தி, விண்ணப்ப படிவங்களை பெற்றுக் கொள்ளலாம் என கழக பொருளாளர் திரு. ஓ. பன்னீர் செல்வி ஏற்கெனவே விடுத்திருந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.