சமத்துவ மக்கள் கட்சி அ.தி.மு.க. கூட்டணியில்தான் உள்ளது; சரத்குமார் பேச்சு

சமத்துவ மக்கள் கட்சி அ.தி.மு.க. கூட்டணியில்தான் உள்ளது; சரத்குமார் பேச்சு

செவ்வாய், பெப்ரவரி 16,2016,

சமத்துவ மக்கள் கட்சி அ.தி.மு.க. கூட்டணியில் தான் உள்ளது என்று சரத்குமார் கூறினார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ. ‘மாற்றத்தை நோக்கி மக்கள் சந்திப்பு’ நிகழ்ச்சி மூலம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து வருகிறார். நீலகிரி மாவட்டம் கூடலூரில் நேற்று பகல் 12 மணிக்கு சரத்குமார் எம்.எல்.ஏ. மக்களை சந்தித்தார். அவரை, புதிய பஸ் நிலையம் ரவுண்டானா பகுதியில் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். மேலும் கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து ஊட்டி ஏ.டி.சி. திடலிலும் பின்னர் குன்னூர், கோத்தகிரியிலும் சரத்குமார் எம்.எல்.ஏ. பொதுமக்களை சந்தித்து பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

மக்களுக்கு சேவை ஆற்ற அரசியல் பயணத்தை மேற்கொண்டு உள்ளேன். நான் வெற்றி பெற்ற தென்காசி தொகுதியில் மேற்கொண்டு உள்ள பணிகள் குறித்து தொகுதி மக்களுக்கு தெரியும். இதுதவிர தமிழக மக்களுக்காக சட்டசபையில் அதிக நேரம் பேசி உள்ளேன். விவசாயத்தை பாதுகாப்பது, எதிர்கால இளைய தலைவர்களை உருவாக்குவது தான் சமத்துவ மக்கள் கட்சியின் நோக்கம். மக்களுக்காக சேவை ஆற்றி வரும் சமத்துவ மக்கள் கட்சியை நீங்கள் ஆதரிக்க வேண்டும்.

வருகிற சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்று முடிவு எடுக்க பொதுக்குழுவில் எனக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து இருக்கிறேன். கடந்த 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது அ.தி.மு.க.வுடன் இருந்த தே.மு.தி.க., மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்டோர் வெளியேறி விட்டனர். ஆனால் நான் தொடர்ந்து கூட்டணி தர்மத்தை கடைபிடித்து வருகிறேன்.

தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல், சட்டசபை இடைத்தேர்தல்கள், பாராளுமன்ற தேர்தல் உள்பட 9 தேர்தல்களில் அ.தி.மு.க. கூட்டணிக்காக பிரசாரம் செய்து உள்ளேன். தற்போது மக்களை ஈர்க்கும் கட்சியாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி உள்ளது.எங்கள் கட்சி தொடர்ந்து அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் உள்ளது.இவ்வாறு சரத்குமார் கூறினார்.