சமஸ்கிருதத்தை எதிர்க்கும் கருணாநிதி, தனது பேரக்குழந்தைகளுக்கு மட்டும் சமஸ்கிருத பெயர்களை வைத்துள்ளார் : செம்மலை குற்றச்சாட்டு

சமஸ்கிருதத்தை எதிர்க்கும் கருணாநிதி, தனது பேரக்குழந்தைகளுக்கு மட்டும் சமஸ்கிருத பெயர்களை வைத்துள்ளார் : செம்மலை குற்றச்சாட்டு

செவ்வாய், ஜூன் 21,2016,

சமஸ்கிருதத்தை எதிர்க்கும் கருணாநிதி, தனது பேரக்குழந்தைகளுக்கு மட்டும் சமஸ்கிருத பெயர்களை வைத்துள்ளார்.என்று ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டுக்களை அ.தி.மு.க உறுப்பினர் செம்மலை சட்டசபையில் முன்வைத்ததால் பெரும் பரபரப்பு நிலவியது.

சட்டசபையில் நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை முன்மொழிந்து அ.தி.மு.க உறுப்பினர் செம்மலை பேசியதாவது:

கவர்னர் உரையை பலர் பாராட்டினார்கள். சிலருக்கு பாராட்ட மனமில்லை. இதுபற்றி முன்னாள் முதல்வர் அண்ணா ஒரு கருத்தை கூறியிருக்கிறார். பண்பு தெரிந்தவர்கள் பாராட்டுகிறார்கள். அது இல்லாதவர்களை பற்றி  கவலைப்பட வேண்டாம். இவ்வாறு செம்மலை கூறியதும், தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினர். இதனால் அவையில் சிறிது நேரம் கூச்சல்-குழப்பம் நிலவியது.

அதைதொடர்ந்து செம்மலை பதிலளிக்கையில், நான் நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் பேசி இருக்கிறேன். என்னுடைய ஒரு வார்த்தை கூட அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதில்லை..  கூட்டணி இன்றி தனித்து மகத்தான வெற்றி பெற்று மக்களின் ஆதரவோடு மீண்டும் ஆட்சி அமைத்த முதல்வருக்கு நன்றி.  எதிர்க்கட்சியினர் உண்மைக்கு மாறான பிரச்சாரத்தை செய்த போதும் மக்கள் அதை ஏற்காமல் முதல்வருக்கு ஆதரவு தெரிவித்தனர். கவர்னர் உரை வெற்று அறிக்கை  என்றார்கள். அது முதல்வரின் வெற்றி அறிக்கையாகவே அமைந்துள்ளது.  தவறான பிரச்சாரம் செய்து ஆட்சியை அபகரிக்க நினைத்தவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டியுள்ளார்கள்.

அவைமுன்னவர் ஒ.பன்னீர்செல்வம் பதிலளிக்கையில்., முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான  கடந்த 5 ஆண்டு சாதனைகளின் மீது குற்றச்சாட்டுகளை கூறி மக்கள் நலக்கூட்டணி உட்பட பல எதிர்க்கட்சியினர் பிரச்சாரம் செய்தார்கள். அதையும் மீறி மீண்டும் ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைந்ததைத்தான் செம்மலை சுட்டிக்காட்டுகிறார். ‘மூளி’ என்றவுடன் நீங்கள் ஏன் காதை தொட்டுபார்க்கிறீர்கள் . வாக்களித்த வாக்காளர்களின் விரல்களில் வைக்கப்பட்ட மை காய்வதற்கு முன்பே அவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி சாதனை புரிந்தவர் முதல்வர். அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ், அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றிய ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி திறன் சாதனைகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.  முதல்வரின்  அறிவுத்திறன், செயலாற்றல், தொலைநோக்கு பார்வை இவைகளால்தான்  அவரால்  எதையும் சாதிக்க முடிகிறது. அதை பொறுத்துகொள்ள முடியாமல் தான்  எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. கவர்னர் உரையை பற்றி எதிர்க்கட்சி தலைவர் கருத்து சொல்லும் போது அதை ‘அம்மா காலண்டர்’ என குறிப்பிட்டார். எதிர்கால திட்டத்திற்கான முதல் அட்டவணை என்று காலண்டருக்கு பொருள் உள்ளது. இதுவரையிலும் அம்மா திட்டம் பற்றி வாய்திறக்காத இவர்கள், இப்போது அம்மா திட்டத்தை பட்டியலிட்டிருப்பதால் இவைகள் நல்ல திட்டங்கள் என அவர்கள் ஒப்பு கொண்டதாகவே கருதுகிறேன்.

திமுக தலைவர் கருணாநிதி, கவர்னர் அறிக்கை முரண்பாடுகளின் மொத்த உருவம் என்று கூறியிருக்கிறார். பிரதமரிடம் அளித்த அதே கோரிக்கைகளை கவர்னர் உரையில் இடம் பெற செய்தது எப்படி முரண்பாடாகும் என்றார். முரண்பாட்டின் மொத்த உருவமே திமுக தலைவர் கருணாநிதி தான் என்று செம்மலை தெரிவித்தார். மேலும் திமுக தலைவர் கருணாநிதி இந்தி திணிப்புக்கும், சமஸ்கிருதத்திற்கும் எதிராக இருப்பதாக காட்டிக்கொள்கிறார். கடந்த திமுக ஆட்சியின் போது தேர்தல் கமிஷன் இந்தி வாசகங்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது. என்றார். இதற்கு எதிராக தி.மு.க.வினர் அனைவரும் எழுந்து நின்று ரகளையில் ஈடுபட்டனர். இதனால் அவையே கூச்சல் குழப்பத்துடன் காணப்பட்டது. அப்போது அந்த ஆதாரப்பூர்வமான இந்தி வாசகங்கள் அடங்கிய புத்தகத்தை சட்டசபையில் தாக்கல் செய்தார். செம்மலை. தொடர்ந்து பேசிய அவர், சமஸ்கிருதத்தை எதிர்க்கும் கருணாநிதி, தனது பேரக்குழந்தைகளுக்கு மட்டும் சமஸ்கிருத பெயர்களை வைத்துள்ளார் என்று குறிப்பிட்டார். இதற்கும் திமுக உறுப்பினர்கள் கூச்சல் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே செம்மலை, இது குறித்து எதிர்க்கட்சித்தலைவர் மறுக்கட்டும். நான் அவர்களின் பெயர்களை சொல்வதற்கு தயாராக இருக்கிறேன் என்றார். ஆனால் எதிர்க்கட்சித்தலைவர் தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.