சர்க்கரை மானியத்தை கிலோவுக்கு ரூ.10 உயர்த்தி தர வேண்டும் : பிரதமர் மோடிக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

சர்க்கரை மானியத்தை கிலோவுக்கு ரூ.10 உயர்த்தி தர வேண்டும் : பிரதமர் மோடிக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

ஆகஸ்ட் 19 , 2017 ,சனிக்கிழமை, 

சென்னை : சர்க்கரை மானிய தொகையை கிலோவுக்கு ரூ.28.50 ஆக உயர்த்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர்கூறியிருப்பதாவது:-

அந்யோதயா அன்ன யோஜனா பயனாளிகளுக்கு மட்டும் சர்க்கரை மானியம் கிலோ ரூ.18.50 என வழங்கப்படும் என்றும், அதே நேரத்தில் ஒரு குடும்பத்துக்கு, ஒரு மாதத்துக்கு ஒரு கிலோ மட்டும் வழங்கப்படும் என்றும் மத்திய அரசாங்கம் கட்டுப்பாடு விதித்துள்ளதை உங்கள் மேலான கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.

இதுதொடர்பாக, 2013-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி, கடுமையான விதிமுறைகளின் கீழ் முன்னுரிமை குடும்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன என்பதையும், அவர்கள் சமுதாயத்தில் மிகவும் நலிந்த பிரிவினர் என்பதையும் வலியுறுத்திக்கூற விரும்புகிறேன்.

சமுதாயத்தில் இத்தகைய ஏழை மற்றும் நலிந்த பிரிவினரை மானிய விலையில் சர்க்கரை பெறுவதில் இருந்து விலக்கி வைத்திருப்பது பொதுமக்களிடையே மிகுந்த மனக்குறையை ஏற்படுத்தும். எனவே, மானிய விலையில் சர்க்கரை வழங்குவதை முன்னுரிமை குடும்பங்களுக்கும் விரிவாக்கம் செய்து வழங்க வேண்டும்.

சர்க்கரை மானியம் ஒரு கிலோ ரூ.18.50 என்பது 2002-ம் ஆண்டு சந்தை விலை ஒரு கிலோ ரூ.32 என்று இருந்தபோது நிர்ணயிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நியாய விலை கடைகளில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்குவதற்காக சர்க்கரை மாநில அரசுக்கு செலவில்லாமல் கிலோ ரூ.13.50 என்று வழங்கப்பட்டது.

இப்போது சர்க்கரையின் சந்தை விலை ரூ.42 ஆக இருக்கிறது. எனவே, மாநில அரசு கூடுதலாக ஒரு கிலோவுக்கு ரூ.10 செலவழிக்க வேண்டியது இருக்கிறது. எனவே, 2002-ல் நிர்ணயிக்கப்பட்ட மானியத்தை ஒரு கிலோ சர்க்கரைக்கு ரூ.28.50 என்று திருத்தம் செய்ய வேண்டும்.

மேலும், ஒரு குடும்பத்துக்கு ஒரு கிலோ சர்க்கரை என்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சராசரியாக ஒரு குடும்பத்தில் 4 உறுப்பினர்கள் இருக்கும் நிலையில், இந்த அளவு மிகவும் குறைவானதாகும். தமிழக அரசு ஒருவருக்கு ½ கிலோ வீதம் அதிகபட்சமாக ஒரு ரேஷன் கார்டுக்கு 2 கிலோ சர்க்கரை வழங்கி வருகிறது.

எனவே, பரம ஏழைகளுக்கு இப்போது வழங்கப்படும் சர்க்கரையின் அளவை குறைப்பது தேவையற்றதாகும். இப்போது வழங்கும் சர்க்கரையின் அளவே தொடர்ந்து வழங்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் பொது வினியோக திட்டத்தின்கீழ் வழங்கப்படும் அத்தியாவசிய பண்டங்களில் சர்க்கரையும் ஒன்றாகும். தமிழ்நாட்டில் மாதந்தோறும் 35,500 மெட்ரிக் டன் சர்க்கரை வழங்கப்படுகிறது. இதனால், ஏற்படும் முழு நிதி சுமையையும் மாநில அரசே ஏற்றுக்கொள்வதால் அரசின் நிதியில் பெரும் பற்றாக்குறை ஏற்படுகிறது.

நீங்கள் இதில் தலையிட்டு முன்னுரிமை குடும்பங்களுக்கு மானிய விலையில் சர்க்கரை வழங்குவதை விஸ்தரிக்க வேண்டும். இப்போது சந்தையில் சர்க்கரையின் விலை கிலோ ரூ.42 என்பதை கருத்தில் கொண்டு, தற்போது வழங்கப்படும் மானியத்தை ரூ.18.50-ல் இருந்து குறைந்தபட்சம் ரூ.28.50 ஆகவாவது உயர்த்தி, மாநிலத்தில் தற்போது வழங்கப்படும் சர்க்கரையின் அளவை தொடர்ந்து வழங்க தமிழக அரசுக்கு உதவ வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.