சர்வதேச வாள்வீச்சு போட்டியில் வெண்கலம் வென்ற பவானிதேவிக்கு முதல்வர் ஜெயலலிதா ரூ.2 லட்சம் பரிசு

சர்வதேச வாள்வீச்சு போட்டியில் வெண்கலம் வென்ற பவானிதேவிக்கு முதல்வர் ஜெயலலிதா ரூ.2 லட்சம் பரிசு

திங்கள் , ஜனவரி 04,2016,

சென்னை : பெல்ஜியம் நாட்டில் கடந்த அக்டோபர் 18 ம்தேதி நடைபெற்ற உலக அளவிலான 18வது பிளமிஸ் ஓபன் வாள்வீச்சுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவாள்வீச்சு வீராங்கனை சி.ஏ. பவானி தேவிக்கு ஊக்கத்தொகையாக முதல்வர் ஜெயலலிதா 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை வழங்கினார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை

அகில இந்திய அளவிலும், பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி வாகைசூட ஏதுவாக, தமிழகத்தைச் சேர்ந்த திறமைமிக்க விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு உயரிய பயிற்சி அளித்தல், உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு மையங்கள் அமைத்தல், சிறந்த விளையாட்டு வீரர்கள் மேலும் பல சாதனைகள் புரிய உதவித் தொகை வழங்குதல், சர்வதேச போட்டிகளில் பங்கு கொண்டு வெற்றி பெறும் வீரர்களுக்கு உயரிய ஊக்கத் தொகை வழங்குதல் போன்ற பல்வேறு சிறப்பான திட்டங்களை முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை சி.ஏ. பவானி தேவி, 2014-ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்றஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கமும்,2015-ஆம் ஆண்டு மங்கோலியாவில் நடைபெற்ற வாள்வீச்சுப் போட்டியில் கலந்துகொண்டு வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளார். இதுமட்டுமின்றி காமன்வெல்த் ஜூனியர் வாள்வீச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களையும் வென்றுள்ளார். சி.ஏ. பவானி தேவி 2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெனிசுவேலா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் நடைபெற்ற வாள்வீச்சுப் போட்டிகளில் கலந்து கொள்ள நிதியுதவி வழங்கிட வேண்டி முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கையை ஏற்று முதல்வர் ஜெயலலிதா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்

பெல்ஜியம் நாட்டில் 18.10.2015 அன்று நடைபெற்ற உலக அளவிலான 18வதுபிளமிஸ் ஓபன் வாள்வீச்சுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதற்காக முதல்வர் ஜெயலலிதா 22.10.2015 அன்று பவானி தேவியை பாராட்டி கடிதம் எழுதியதோடு, தமிழகஅரசின் சார்பில் 2 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றுதெரிவித்தார்.அதன்படி, பெல்ஜியம் நாட்டில் நடைபெற்ற உலக அளவிலான 18வது பிளமிஸ்ஓபன் வாள்வீச்சுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற வாள்வீச்சு வீராங்கனை சி.ஏ. பவானி தேவிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 28.ம்தேதி தலைமைச் செயலகத்தில்,ஊக்கத்தொகையாக 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை வழங்கினார்கள்.

முதல்வர் ஜெயலலிதாவிடம் ஊக்கத்தொகைக்கான காசோலையை பெற்றுக் கொண்ட பவானி தேவி, தன்னை பாராட்டி, ஊக்கத்தொகை வழங்கியமைக்காக தனதுநெஞ்சார்ந்த நன்றியினை முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தெரிவித்துக் கொண்டார். இந்த நிகழ்வின்போது, பவானி தேவியின் பெற்றோர் உடனிருந்தனர்.