சாத்தனூர் அணையில் இருந்து நாளை முதல் நீர் திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு:50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற நடவடிக்கை

சாத்தனூர் அணையில் இருந்து நாளை முதல் நீர் திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு:50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற நடவடிக்கை

வியாழன் , பெப்ரவரி 11,2016,

விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று, திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக, நாளை முதல் தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

முதலமைச்சர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் நீர்த்தேக்கத்தில் இருந்து, பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து தமக்கு கோரிக்கைகள் வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூர் நீர்த்தேக்கத்திலிருந்து சாத்தனூர் இடது மற்றும் வலதுபுறக் கால்வாய் வாயிலாக பாசனம் பெறும் பகுதிகளுக்கும், விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அணைக்கட்டுப் பழைய ஆயக்கட்டுப் பாசன பகுதிகளுக்கும் நாளை முதல் தண்ணீர் திறந்து விட தாம் ஆணையிட்டுள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதனால் திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை தாம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்வதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.