சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, தங்கமணி, விஜயபாஸ்கர் நேரில் ஆறுதல்

சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, தங்கமணி, விஜயபாஸ்கர் நேரில் ஆறுதல்

ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 07, 2016,

டி.கல்லுப்பட்டி சாலை விபத்தில் காயமடைந்தவர்களை அமைச்சர்கள்  செல்லூர் கே.ராஜு,  பி.தங்கமணி, டாக்டர்.சி.விஜயபாஸ்கர் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.
மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே நேற்று நடைபெற்ற சாலை விபத்தில் காயமடைந்து, மதுரை  ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை  முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி கூட்டுறவுத்துறை அமைச்சர்  செல்லூர் கே.ராஜு,  தொழில்துறை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர்  பி.தங்கமணி,  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.
பேரையூர் வட்டம், டி.கல்லுப்பட்டி சுப்புலாபுரம் கிராமம் பாறைப்பட்டி சோதனைச் சாவடி அருகே நேற்று  பிற்பகல் திருநெல்வேலியிலிருந்து குமுளி நோக்கி சென்ற அரசுப் பேருந்தும், கரூரிலிருந்து சிமெண்ட் மூட்டைகள் ஏற்றிக்கொண்டு செங்கோட்டை சென்ற லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 10 ஆண்கள், 5 பெண்கள், 1 சிறுவன் உட்பட 16 நபர்கள் உயிரிழந்தனர். 33 நபர்கள் காயமடைந்தனர்.
முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைப்படி, சம்பவம் நடந்த இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்ற  அமைச்சர்  செல்லூர் கே.ராஜு, மாவட்ட கலெக்டர் கொ.வீரராகவராவ், மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா, திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் எம்.முத்துராமலிங்கம் ஆகியோர் மீட்புப்பணிகளை துரிதப்படுத்தி, காயமடைந்தவர்களை மீட்டு மதுரை அரசு  ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் பலியானவர்களுக்கு நிவாரண நிதியாக தலா ரூ.1  லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மதுரை  ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, மாவட்ட கலெக்டர், மேயர் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.
பின்னர் நேற்று நள்ளிரவு 1 மணியளவில்  அமைச்சர் பி.தங்கமணி, இன்று காலை 7 மணியளவில்   அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர், அமைச்சர்  செல்லூர் கே.ராஜு  ஆகியோர் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில்,  முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைப்படி காயமடைந்தவர்களுக்கு தனியார் மருத்துவமனைக்கு நிகராக உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என  தெரிவித்தார்.
அப்போது மாவட்ட கலெக்டர் கொ.வீரராகவராவ் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே.ஜக்கையன், பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.கோபாலகிருஷ்ணன், மதுரை வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமாரி உட்பட பலர் உடனிருந்தனர்.