சியாச்சின் பனிச்சரிவில் உயிரிழந்த தமிழக வீரர்களுக்கு ராணுவ வீரர்கள், அமைச்சர்கள் நேரில் அஞ்சலி:முதலமைச்சர் உத்தரவின்பேரில் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கி ஆறுதல்

சியாச்சின் பனிச்சரிவில் உயிரிழந்த தமிழக வீரர்களுக்கு ராணுவ வீரர்கள், அமைச்சர்கள் நேரில் அஞ்சலி:முதலமைச்சர் உத்தரவின்பேரில் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கி ஆறுதல்

செவ்வாய், பெப்ரவரி 16,2016,

சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த 4 ராணுவ வீரர்களின் உடல்கள், தனிவிமானம் மூலம் கொண்டுவரப்பட்டு, அவர்களின் சொந்தஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. ராணுவ வீரர்களின் உடல்களுக்கு, முதலமைச்சர்  ஜெயலலிதா சார்பில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

காஷ்மீர் மாநிலம், சியாச்சின் பகுதியில், கடந்த 3-ம் தேதி ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி, தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் ஹவில்தார் திரு. M.ஏழுமலை, ஹவில்தார் திரு. S. குமார், சிப்பாய் திரு. G. கணேசன், சிப்பாய் திரு. N. ராமமூர்த்தி ஆகியோர் உயிரிழந்தனர். நாட்டை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தமிழக ராணுவ வீரர்கள் 4 பேர் உயிரிழந்ததை அறிந்து, முதலமைச்சர்  ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டதுடன், உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டார்.

இந்நிலையில், உயிரிழந்த தமிழக ராணுவ வீரர்களின் உடல்கள், டெல்லியிலிருந்து நேற்றிரவு தனிவிமானம் மூலம் பெங்களூரு மற்றும் சென்னை, மதுரைக்கு கொண்டுவரப்பட்டன. சென்னை விமான நிலையத்தில், வேலூர் மாவட்டம், பாகாயம் கிராமத்தைச் சேர்ந்த ஹவில்தார் திரு. M.ஏழுமலையின் உடலுக்கு, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா சார்பில், அமைச்சர்கள் திருமதி. பா. வளர்மதி, திரு. T.K.M. சின்னையா மற்றும் தென்பிராந்திய ராணுவ பொறுப்பு அதிகாரி கபீர்சிங் உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், ஆம்புலன்ஸ் வாகனம் மூலம், ராணுவ வீரர் ஏழுமலையின் உடல் சொந்த ஊரான வேலூர் மாவட்டம், அடுக்கம்பாறைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா சார்பில், அமைச்சர் திரு.கே.சி. வீரமணி மற்றும் மாவட்ட ஆட்சியர் திரு. இரா. நந்தகோபால், மேயர் திருமதி கார்த்தியாயினி உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, ராணுவ வீரர் ஏழுமலையின் குடும்பத்தினரை அமைச்சர் திரு. கே.சி. வீரமணி நேரில் சந்தித்து, முதலமைச்சர் உத்தரவுப்படி 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்திலிருந்து தேனி மாவட்டம், குமணன்தொழு பகுதியைச் சேர்ந்த ஹவில்தார் திரு. S. குமார்; மதுரை மாவட்டம், சொக்கதேவன்பட்டியைச் சேர்ந்த சிப்பாய் திரு. G. கணேசன் ஆகியோரின் உடல்கள், தனிவிமானத்தில் மதுரை விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டன. அங்கு, ராணுவ வீரர்களின் உடல்களுக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா சார்பில், அமைச்சர் திரு. செல்லூர் கே. ராஜு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தமிழக அரசு சார்பில், மாவட்ட ஆட்சியர் திரு. வீரராகவராவ், மாவட்ட காவல்துறை காண்காணிப்பாளர் திரு. விஜயேந்திரபிதாரி ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதனையடுத்து, ராணுவவீரர் கணேசனின் உடல், சொந்த ஊரான சொக்கதேவன்பட்டிக்கு கொண்டுசெல்லப்பட்டது. அவரது குடும்பத்தினரை அமைச்சர் திரு. செல்லூர் கே. ராஜு நேரில் சந்தித்து, முதலமைச்சர் உத்தரவுப்படி, 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி ஆறுதல் கூறினார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள ராணுவ வீரர் கணேசனின் உடல், இன்றுகாலை 10 மணிக்கு முழுராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது.

மதுரை விமான நிலையத்தில் இருந்து தேனி கொண்டுவரப்பட்ட லான்ஸ் ஹவில்தார் குமாரின் உடல், அவரது சொந்த ஊரான குமணன்தொழுவுக்கு இன்று காலை கொண்டுசெல்லப்படுகிறது. அங்கு, அவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் உத்தரவுப்படி 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.

இதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம், குடிசாதனப்பள்ளியைச் சேர்ந்த சிப்பாய் திரு. ராமமூர்த்தியின் உடல், தனிவிமானம் மூலம் பெங்களூருவுக்கு கொண்டுவரப்பட்டு, பின்னர் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. குடிசாதனப்பள்ளியில் ராணுவ வீரரின் உடலுக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா சார்பில், அமைச்சர்கள் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி, திரு. P. பழனியப்பன் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர், ராணுவவீரர் ராமமூர்த்தியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து, முதலமைச்சர் உத்தரவுப்படி, 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் அமைச்சர்கள் வழங்கி ஆறுதல் கூறினர்.