சிறுதாவூர் பங்களாவில் பல ஆயிரம் கோடி பதுக்கியதாக அவதூறு பிரச்சாரம் : வைகோ மீது 2 சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு

சிறுதாவூர் பங்களாவில் பல ஆயிரம் கோடி பதுக்கியதாக அவதூறு பிரச்சாரம் : வைகோ மீது 2 சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு

வெள்ளி, ஏப்ரல் 01,2016,

சிறுதாவூர் பங்களாவில் பல ஆயிரம் கோடி பதுக்கியுள்ளதாக, அவதூறு பரப்பியதாக காஞ்சிபுரம் அதிமுக மாவட்டச் செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் கொடுத்த புகார் அடிப்படையில், வைகோ மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிரடி விசாரணை தொடங்கியுள்ளனர்.

காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் நேற்று முன்தினம் இரவு சென்னையை அடுத்த திருப்போரூர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

பல ஆயிரம் கோடிபதுக்கியதாக குற்றச்சாட்டு

29.3.2016 அன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வழங்கிய புகாரின் நகலை செய்தித்தாள் நிருபர்களிடம் வழங்கியுள்ளார். வைகோ கொடுத்த புகார் நகலின் அடிப்படையில் நான் இந்த புகாரை கொடுக்கிறேன். அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா மீது அவதூறு ஏற்படுத்தும் வகையில் அபாண்டமான பொய் குற்றச்சாட்டுகளை கூறி வைகோ தேர்தல் கமிஷனில் புகார் கொடுத்துள்ளார்.

அவரது புகாரில் தமிழக முதல்-அமைச்சர் அவ்வப்போது தங்குவதற்காக பயன்படுத்தும் சிறுதாவூர் பங்களாவிற்கு 27.03.2016 அன்று இரவு பெரிய கண்டெய்னர் லாரி சென்றதாகவும், அதுபற்றி நான் விசாரித்து பார்த்ததில் பல ஆயிரம் கோடி ரூபாய் அந்த கண்டெய்னரில் கொண்டு சென்றதாக தனக்கு நம்பகமான தகவல் வந்திருப்பதாகவும், அதுமட்டுமல்லாமல் 28.03.2016 அன்று காலை சுமார் 10-க்கும் மேற்பட்ட லாரிகள் தார்ப்பாயால் முழுமையாக மூடப்பட்டு சிறுதாவூர் பங்களாவிற்கு வந்ததாகவும், அந்த லாரிகள் அனைத்திலும் பல ஆயிரம் கோடி லஞ்சப்பணம் எடுத்துச் செல்லப்பட்டு சிறுதாவூர் பங்களாவில் மறைத்து வைத்திருப்பதாக தனக்கு நம்பகமாக தகவல் கிடைத்திருப்பதாகவும் வைகோ குறிப்பிட்டுள்ளார்.

பொய்யான தகவல்

மேலும் அவர் கொடுத்த புகாரில் சிறுதாவூர் பங்களாவில் பல ரகசிய அறை இருப்பதாகவும், அந்த அறைகளில் சட்ட விரோதமான லஞ்சப்பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் தனக்கு தகவல் கிடைத்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

அவர் கொடுத்துள்ள புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானது. சிறுதாவூர் பங்களாவில் நிறுத்தப்பட்டிருப்பதாக சொல்லப்படும் லாரிகள் எங்கள் கழகத்தின் தேர்தல் பிரசாரத்திற்காக தனியார் நிறுவனத்திடமிருந்து எங்கள் கழகத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் மத்தியில் கலவரத்தை தூண்டும் எண்ணத்துடனும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்கை பொறுத்துக்கொள்ள முடியாமலும், எங்கள் கழகத்தின் பொதுச்செயலாளரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் எண்ணத்துடன் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள இந்த நேரத்தில் பொதுமக்களிடையே அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்துடன் உண்மையில்லை என்று தெரிந்தும் பொய்யான புகாரை தேர்தல் கமிஷனிடம் வைகோ கொடுத்துள்ளார்.

அவதூறான பொய்யான புகாரை கொடுத்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மீதும், அவர் கொடுத்த அவதூறு செய்தியை ஒளிபரப்பிய சன்டிவி மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் கொடுத்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த புகார் மனு மீது திருப்போரூர் போலீசார் இ.பி.கோ.1 53-ஏ, 505(1)(பி) ஆகிய 2 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதில் 153-ஏ சட்டப்பிரிவு இருபிரிவினரிடையே கலவரத்தை தூண்டும் குற்றச்சாட்டை கூறுவதாகும்.

505(1)(பி) என்ற சட்டப்பிரிவு அவதூறை பரப்பு சட்டம், ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் குற்றச்சாட்டை சொல்வதாகும்.

இந்த இரண்டு சட்டப்பிரிவுகளும் கோர்ட்டில் நிரூபிக்கப்பட்டால் தலா 3 ஆண்டு சிறைத்தண்டனையை பெற்றுத்தரக்கூடியது என்று தெரிய வந்துள்ளது.