சிறு குறு விவசாயிகளின் வருவாயை உயர்த்தி, அவர்களது வளத்தையும் பெருக்கியுள்ளது தமிழக அரசு:முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு ஆளுநர் ரோசய்யா பாராட்டு

சிறு குறு விவசாயிகளின் வருவாயை உயர்த்தி, அவர்களது வளத்தையும் பெருக்கியுள்ளது தமிழக அரசு:முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு ஆளுநர் ரோசய்யா பாராட்டு

புதன், ஜனவரி 20,2016,

சிறப்பாக திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் முன்னோடித் திட்டங்களான விலையில்லா கறவை மாடுகள், வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டத்தின் மூலமாக சிறு குறு விவசாயிகளின் வருவாயை உயர்த்தி, அவர்களது வளத்தையும் இந்த அரசு பெருக்கியுள்ளது என்று ஆளுநர் ரோசய்யா கவர்னர் உரையில் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பாராட்டு தெரிவித்து உள்ளார்.

14-வது சட்டப்பேரவையின் கடைசி கூட்டத்தொடர் ஆளுநர் ரோசய்யா உரையுடன் தொடங்கியது.

கவர்னர் உரையில் கூறப்பட்டு இருப்பதாவது:–

சேவைகளை மக்களின் இல்லங்களுக்கே சென்றடைவதை நோக்கமாக கொண்டு இந்த அரசு அம்மா திட்டம், இ–சேவை மையங்கள் மூலம் சேவைகளை வழங்குவது போன்ற பல்வேறு புதுமையான திட்டங்களை கொண்டு வந்துள்ளது.

பல்வேறு புதுமையான முயற்சிகள் மூலம் வேளாண் துறையின் வளர்ச்சிக்கு இந்த அரசு உயர் முன்னுரிமை அளித்து வருகிறது. இதனால் 2006–2007 முதல் 2010–2011 வரையிலான ஐந்தாண்டு காலத்தில் உணவு தானிய உற்பத்தியில் மாநிலத்தில் எட்டப்பட்ட முந்தைய உயர் அளவான 82.64 லட்சம் மெட்ரிக் டன் அளவை விஞ்சி, கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்று முறை 100 லட்சம் மெட்ரிக் டன்னுக்கும் கூடுதலாக உற்பத்தி செய்து நமது மாநிலம் சாதனை படைத்துள்ளது.

சிறப்பாக திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் முன்னோடித் திட்டங்களான விலையில்லா கறவை மாடுகள், வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டத்தின் மூலமாக சிறு குறு விவசாயிகளின் வருவாயை உயர்த்தி, அவர்களது வளத்தையும் இந்த அரசு பெருக்கியுள்ளது.

பெரம்பலூர், அரியலூர் போன்ற பின்தங்கிய மாவட்டங்களுக்கு பயனளிக்கும் வகையில் பெரம்பலூரில் புதிய பால் பதப்படுத்தும் நிலையம் ஒன்றை அமைக்க இந்த அரசு முயற்சி எடுத்துள்ளது.

அனைவருக்கும் பயனளிக்கக் கூடிய பொது விநியோகத் திட்டத்தின் மூலம், தமிழகத்தில் இரண்டு கோடி குடும்பங்களுக்கு விலையில்லா அரிசியும், மானிய விலையில் பருப்பு, சமையல் எண்ணை, கோதுமை, சர்க்கரை மற்றும் மண்எண்ணை ஆகியவையும் வழங்கப்பட்டு வருகிறது.

இதனால் அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பருப்பு வகைகள் மற்றும் சமையல் எண்ணையின் விலை பெருமளவு உயர்ந்துள்ள போதும், பொதுமக்களின் நலன்கருதி இப்பொருட்களை மிகக்குறைந்த விலையில் இந்த அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது.

பொங்கல் பண்டிகையை உவகையோடு கொண்டாடும் வகையில் 1.91 கோடி அரிசி பெறும் தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு மற்றும் 100 ரூபாய் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கியதற்காக முதல்– அமைச்சரை பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன்.

பண்ணை பசுமைக் காய்கறிக் கடைகள், அம்மா மருந்தகங்கள், அம்மா உணவகங்கள், அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மா சிமெண்ட் போன்ற இந்த அரசு எடுத்த குறிப்பிடத்தக்க முயற்சிகள், ஏழை– எளியோருக்கு பயனளித்துள்ளதோடு பல பாராட்டுக்களையும் பெற்றுள்ளன.

முதல்–அமைச்சரின் சிந்தையில் உருவான முன்னோடித் திட்டமான அம்மா உணவகத் திட்டம் மற்ற மாநிலங்களும் பின்பற்ற உகந்த திட்டமாக அனைவராலும் போற்றப்படுகிறது. இதுவரை திறக்கப்பட்டுள்ள 106 அம்மா மருந்தகங்கள் ஏழை– எளியோருக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளன.என்று கூறியுள்ளார்.