சிறு வணிகர் கடனுதவி திட்ட முகாம் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

சிறு வணிகர் கடனுதவி திட்ட முகாம் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

செவ்வாய், பெப்ரவரி 02,2016,

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தொடங்கப்பட்ட சிறு வணிகர் கடனுதவி திட்ட முகாம் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் துவக்கி வைக்கப்பட்ட, பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மிகச்சிறிய முதலீட்டில் அன்றாடம் பூக்கள், பழங்கள், காய்கறிகள் போன்ற பொருட்களை வாங்கி விற்பனை செய்துவரும் தெருவோர சிறு வணிகர்கள் பெட்டிக்கடை நடத்துவோர் முதலீட்டை இழந்து தங்களின் வாழ்வாதாரத்திற்காக தனியாரிடம் அதிக வட்டியில் கடன் பெறும் நிலையை தவிர்க்கவும்,ஏழை எளிய வணிகர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மீண்டும் பெற வழிவகை செய்யும் அம்மா சிறு வணிக கடனுதவி திட்ட சிறப்பு முகாம்கள் மேலும் 3 நாட்கள் ( 03.02.2016 முதல் 05.02.2016 வரை) நீட்டிப்பு செய்து அரசு உத்திரவிட்டுள்ளது.

பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மிகச்சிறிய முதலீட்டில் அன்றாடம் பூக்கள், பழங்கள், காய்கறிகள் போன்ற பொருட்களை வாங்கி விற்பனை செய்துவரும் தெருவோர சிறு வணிகர்கள் பெட்டிக்கடை நடத்துவோர் முதலீட்டை இழந்து தங்களின் வாழ்வாதாரத்திற்காக தனியாரிடம் அதிக வட்டியில் கடன் பெறும் நிலையை தவிர்க்கவும் ஏழை எளிய வணிகர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மீண்டும் பெற வழிவகை செய்யும் அம்மா சிறு வணிகக் கடனுதவித் திட்டத்தினை முதல்வர் 22.1.2016 அன்று துவக்கி வைத்தார்கள்.

இத்திட்டத்தின் கீழ், பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், தூத்துக்குடி மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த தெரு வியாபாரிகள், நடைபாதையில் கடை வைத்திருப்பவர்கள், பெட்டிக்கடை நடத்துபவர்கள் போன்ற சிறு வணிகர்கள் எளிதில் கடன் பெறும் வகையில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் நகர கூட்டுறவு வங்கிகள் மூலம், அவர்கள் வியாபாரம் செய்யும் இடங்களுக்கு அருகிலேயே 22.1.2016 முதல் 2.2.2016 வரை 10 தினங்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 1.2.2016 வரை 9 தினங்களில் 4470 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 2,29,854 விண்ணப்பங்களை சிறு வணிகர்கள் பெற்றுள்ளனர்.

இன்றும் (2.2.2016) சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டம் ஏழை எளிய நிலையிலுள்ள சிறு வியாபாரிகள் மற்றும் பொது மக்களிடையே ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ளதால் அனைத்து சிறு வியாபாரிகளும் முழுஅளவில் பயன்பெறும் வகையில் மேலும் கூடுதலாக சில நாட்கள் சிறப்பு முகாம்களை நீட்டித்து நடத்த வேண்டுமென அரசுக்கு சிறு வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அதனடிப்படையில் அனைத்து சிறு வியாபாரிகளும் முழு அளவில் பயனடையும் வகையில் அம்மா சிறு வணிக கடனுதவி திட்ட சிறப்பு முகாம்கள் மேலும் 3 நாட்கள் (03.02.2016 முதல் 05.02.2016 வரை) நீட்டிப்பு செய்து அரசு உத்திரவிட்டுள்ளது.