சிறு வியாபாரிகள் நலனில் அக்கறை கொண்டவர் முதல்வர் ஜெயலலிதா: அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு

சிறு வியாபாரிகள் நலனில் அக்கறை கொண்டவர் முதல்வர் ஜெயலலிதா: அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு

செவ்வாய், பெப்ரவரி 02,2016,

முதல்–அமைச்சர் ஜெயலலிதா தமிழகம் முழுவதும் ரூ.100 கோடி மதிப்பில் சிறு வியாபாரிகளுக்கு கடன் உதவி வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார்.

அதன்படி கடந்த 10 நாட்களாக தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகாம்கள் நடத்தப்பட்டு கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மதுரையில் இந்த கடன் உதவி வழங்கும் முகாம் கீழமாரட் வீதி, தயிர் மார்க்கெட்டில் இன்று காலை நடந்தது.

நிகழ்ச்சிக்கு கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். அமைச்சர் செல்லூர் ராஜூ, சிறு வியாபாரிகளுக்கு கடன் உதவித்தொகைகளை வழங்கினார்.

விழாவில் அவர் பேசியதாவது;
ஏழை, எளிய மக்களின் நலனில் அக்கறை கொண்டு சிறு சாலையோர வியாபாரிகள் பயன்பெறும் வகையில் 2 லட்சம் பேருக்கு ரூ.100 கோடி கடன் உதவி வழங்கும் திட்டத்தை கூட்டுறவு வங்கிகள் மூலம் முதல்வர் அம்மா அறிவித்துள்ளார். எத்தனையோ சிறப்பான திட்டங்களில் இதுவும் ஒன்று.

தமிழகம் முழுவதும் இந்த திட்டத்தில் 2 லட்சத்து 29 ஆயிரத்து 854 பேர் கடன் உதவி பெற்றுள்ளனர். இதில் முதல் கட்டமாக 42 ஆயிரத்து 618 பேருக்கு ரூ.21 கோடியே 30 லட்சம் கடன் உதவிகளாக வழங்கப்பட்டு உள்ளது. இதன் முலம் ஏழை வியாபாரிகளுக்கு குறைந்த பட்சமாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். அதை வாரம்தோறும் ரூ.200 வீதம் 25 வாரங்கள் செலுத்த வேண்டும். ஒழுங்காக செலுத்துபவர்களுக்கு மீண்டும் கடன் உதவி வழங்கப்படும்.

சிறு வியாபாரிகள் நலனில் அக்கறை கொண்ட முதல்வர் அம்மா கந்து வட்டிக்காரர்களின் பிடியில் இருந்து வியாபார பெரு மக்களை காப்பாற்றுவதற்காக இந்த மகத்தான திட்டத்தை அறிவித்துள்ளார். இதை சிறு வியாபாரிகளாகிய நீங்கள் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

கடந்த தி.மு.க. ஆட்சியில் இதுபோன்ற திட்டங்கள் எதுவும் நடைமுறைப்படுத்தவில்லை. கருணாநிதி தனது குடும்ப நலனிலேயே அக்கறை கொண்டவர். தமிழக மக்களின் நலனை சிந்திக்கும் ஒரே தலைவர் முதல்வர் அம்மா மட்டும் தான். எனவே இந்த ஆட்சி தொடர நீங்கள் துணை நிற்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் பொது விநியோக திட்ட துணை கலெக்டர் ஜீவா, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரைப்பாண்டியன், பாண்டியன் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் வில்லாபுரம் ராஜா, ஆவின் தலைவர் தங்கம், துணைமேயர் திரவியம், எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், மண்டல தலைவர்கள் சாலைமுத்து, ஜெயவேல், சண்முகவள்ளி, பரவை பேரூராட்சி தலைவர் ராஜா, பொதுக்குழு உறுப்பினர் முத்துராமலிங்கம், பகுதி செயலாளர்கள் ஜெயபால், ராஜலிங்கம், மாரிச்சாமி, முருகன், இளைஞர் அணி நிர்வாகிகள் தயிர் மார்க்கெட் அன்பழகன், செந்தில்குமார், கவுன்சிலர்கள் புதூர் அபு தாகீர், கலாவதி, முத்து மீனா, குமார், வட்ட செயலாளர்கள் தேவதாஸ், பஜார் துரைப்பாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.