சிறை பிடித்த ‘29 மீனவர்கள், 53 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்’; பிரதமருக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம்

சிறை பிடித்த ‘29 மீனவர்கள், 53 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்’; பிரதமருக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம்

வெள்ளி,நவம்பர்,27-2015

 

சென்னை,

இலங்கை சிறை பிடித்த 29 மீனவர்களையும், 53 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுங்கள் என்று பிரதமருக்கு, ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திரமோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

பாக் நீரிணைப்பகுதியில் பாரம்பரிய மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள மற்றொரு சம்பவம் குறித்து தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் மற்றும் கைது சம்பவங்கள் தொடர்ந்து நீடித்து வருவது, மீனவ சமுதாயத்தினர் மத்தியில் பதற்றத்தையும், அச்சத்தையும்ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மீன்பிடித்தளத்திலிருந்து 2 விசைப்படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற 11 மீனவர்கள், 25-ந்தேதி நள்ளிரவில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, தலைமன்னார் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மற்றொரு நிகழ்வாக புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்திலிருந்து மீன் பிடிக்கச்சென்ற 4 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் 26-ந்தேதி அதிகாலை கைது செய்யப்பட்டு, காங்கேசன் துறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

கச்சத்தீவு பிரச்சினை

இந்த ஏழை மீனவர்கள் தங்களது ஒரே வாழ்வாதாரமான மீன்பிடி தொழிலை அமைதியான முறையில் மேற்கொண்டிருந்தனர். வரலாற்று ரீதியில் பாரம்பரிய மீன்பிடி கடல் பகுதியான பாக் நீரிணையில் அவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர்.

கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்துக் கொடுக்க, கடந்த 1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளில், இந்தியா-இலங்கை இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் செல்லத்தக்கத்தன்மையை எதிர்த்து, நான் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வலுவான வழக்கு காரணமாக, சர்வதேச கடல் எல்லைக்கோடு பிரச்சனை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் தமிழக அரசும் தன்னை வாதியாக இணைத்துக்கொண்டுள்ளது.

பருவமழையால் பாதிப்பு

நான் ஏற்கெனவே பலமுறை குறிப்பிட்டுள்ளதன்படி, இலங்கை அரசின் பிடியில் 50 படகுகள் பல மாதங்களாக தொடர்ந்து இருந்து வருகின்றன. தற்போது கடுமையான வடக்கிழக்கு பருவமழையால், குறிப்பாக இந்த ஆண்டு மிக அதிக மழைப்பொழிவு இருப்பதால், தங்களின் ஒரே வாழ்வாதாரமான மீன்பிடி படகுகள் சீரமைக்க முடியாத அளவு பழுதடையும் என்பதால், தமிழக மீனவர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

இலங்கை கடற்கரையில் நிலவும் மோசமான தட்பவெட்ப நிலையால் கவனிப்பாரின்றி கிடக்கும் மீனவர்களின் ஒரே வாழ்வாதாரமான படகுகள் மிகுந்த சேதம் அடைந்திருப்பது வேதனையடையச் செய்துள்ளது. எனவே, இலங்கை வசம் உள்ள படகுகளின் நிலையை, அந்நாட்டு அரசின் உயரதிகாரிகள் நிலையில் எடுத்துச் சென்று, அவற்றை உடனடியாக விடுவிப்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம்.

எனவே இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 29 மீனவர்களையும், 53 மீன்பிடிப்படகுகளையும் உடனடியாக விடுவிக்க நீங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும். மீனவர்களை உடனடியாக மீட்க ராஜாங்க ரீதியில் தலையிட்டு விரைந்து தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் ஜெயலலிதா கூறியுள்ளார்.