சி பிரிவு காலிப் பணியிடங்களிலும் இடஒதுக்கீடு:தமிழக அரசின் உத்தரவால் மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி

சி பிரிவு காலிப் பணியிடங்களிலும் இடஒதுக்கீடு:தமிழக அரசின்  உத்தரவால் மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி

புதன்கிழமை, ஜனவரி 13, 2016,

மாற்றுத் திறனாளிகளுக்கு சி பிரிவு காலிப் பணியிடங்களிலும் 3 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. சி பிரிவு காலிப் பணியிடங்களில் 42 காலியிடங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு உகந்ததாக இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
அரசுத் துறைகளில் 3 சதவீத காலிப் பணியிடங்களை, மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்க அரசு உத்தரவு வழிவகை செய்கிறது. இந்த 3 சதவீதத்தில், ஒரு சதவீதம், பார்வையற்றவர்களுக்கும், 1 சதவீதம் செவித்திறன் இழந்தோருக்கும், 1 சதவீதம் ஊனமுற்றோருக்கும் பிரித்து அளிக்கப்படுகிறது.
சுகாதாரத் துறையில் பாரா-மெடிக்கல் காலிப் பணியிடங்களில் சி, டி பிரிவு இடங்களைக் கண்டறிந்து அதில் மாற்றுத் திறனாளிகளை பணியமர்த்துவது அவசியம் என சுகாதார பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் அரசுக்குத் தெரிவித்துள்ளார்.
அதன்படி, சி பிரிவு காலியிடங்களில் 42 இடங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு உகந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த இணை மருத்துவ காலிப் பணியிடங்களில் சி பிரிவுக்கான இடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு அளிக்கலாம் என்று மருத்துவ பணியாளர் தேர்வாணையத் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அவரது கோரிக்கை அரசால் கவனமுடன் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்படுகிறது என சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் மூலம், சுகாதாரத் துறையில் பாரா-மெடிக்கல் பிரிவில் சி தொகுதியில் உள்ள காலிப் பணியிடங்களில் 3 சதவீதம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட உள்ளது. தமிழக அரசின் இந்த உத்தரவால் மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.