சுமார் 704 கோடி ரூபாய் செலவில், ஒன்றரை லட்சம் பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியுடன், திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்க நாணயம் வழங்கும் திட்டம்:5 பயனாளிகளுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நேரில் வழங்கி வாழ்த்து

சுமார் 704 கோடி ரூபாய் செலவில், ஒன்றரை லட்சம் பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியுடன், திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்க நாணயம் வழங்கும் திட்டம்:5 பயனாளிகளுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நேரில் வழங்கி வாழ்த்து

ஞாயிறு, 22 நவம்பர் 2015

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, தலைமைச் செயலகத்தில் சமூக நலத்துறை சார்பில் 2015-2016-ம் நிதி ஆண்டிற்கு சுமார் 704 கோடி ரூபாய் செலவில், ஒன்றரை லட்சம் பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியுடன், திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்க நாணயம் வழங்கும் அடையாளமாக, 5 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி மற்றும் தங்க நாணயங்களை வழங்கினார்.

ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் தங்கள் மகளின் திருமணம் தொடர்பான அத்தியாவசியமான செலவுகளை மேற்கொள்வதன் அவசியத்தினை கருத்தில் கொண்டும், விதவையரின் மகள், ஆதரவற்ற பெண்கள், கலப்புத் திருமணம் செய்து கொள்ளும் தம்பதியினர் மற்றும் மறுமணம் செய்து கொள்ளும் விதவையர் ஆகியோர் பயன்பெறும் வகையில், தமிழக அரசு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம், ஈ.வெ.ரா.மணியம்மையார் நினைவு விதவை தாய்மார்களின் மகளுக்கான திருமண நிதி உதவித் திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதி உதவித் திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதி உதவித் திட்டம் மற்றும் டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவித் திட்டம் ஆகிய திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா ஏழை பெற்றோர்கள் மனம் குளிரும் வண்ணம் திருமண நிதி உதவியுடன் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்தை கடந்த 2011-ம் ஆண்டு ஜுன் மாதம் 6-ம் தேதி துவக்கி வைத்தார்- கடந்த நான்கு ஆண்டுகளில், 5 லட்சத்து 49 ஆயிரத்து 231 பயனாளிகளுக்கு 2 ஆயிரத்து 465 கோடியே ஒரு லட்சம் ரூபாய் செலவில் திருமண நிதியுதவியுடன் 2 ஆயிரத்து 196 புள்ளி ஒன்பது இரண்டு கிலோ கிராம் தங்க நாணயங்கள் வழங்கப்பட்டுள்ளன.

2015-2016 ஆம் நிதி ஆண்டில் ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 935 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியுடன் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்க நாணயம் வழங்கிட 703 கோடியே 92 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசால் கடந்த ஜூன் மாதம் 2-ம் தேதி ஆணையிடப்பட்டது.

அதன்படி, 2015-2016-ம் நிதியாண்டிற்கு ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 935 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியுடன் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்க நாணயம் வழங்கும் அடையாளமாக சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சார்ந்த 5 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி மற்றும் தங்க நாணயங்களை முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, அப்போது, திருமணத்திற்கான வாழ்த்துக்களை பயனாளிகளுக்கு தெரிவித்துக் கொண்டு, நல்லமுறையில் திருமணம் நடைபெற்று சந்தோஷமான வாழ்க்கை அமைய வேண்டும் என்றும், எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வேண்டும் என்றும், பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டுமென்றும் வாழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சியில், சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சர் திருமதி. பா. வளர்மதி, தலைமைச் செயலாளர் திரு. கு. ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் திருமதி.ஷீலா பாலகிருஷ்ணன், சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை முதன்மைச் செயலாளர் திரு.பொ. சிவசங்கரன், சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை ஆணையர் திரு.வி.எம். சேவியர் கிறிசோ நாயகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவிடமிருந்து திருமண நிதியுதவியுடன் திருமாங்கல்யம் செய்ய தங்க நாணயங்களை பெற்றுக் கொண்ட பயனாளிகள் தங்கள் நெஞ்சார்ந்த நன்றியினை முதலமைச்சருக்கு தெரிவித்துக் கொண்டார்கள்.