20 ஆயிரம் சுய உதவிக்குழு பயிற்சியாளர்களுக்கு அம்மா கைபேசி வழங்கும் திட்டம்:முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

20 ஆயிரம் சுய உதவிக்குழு பயிற்சியாளர்களுக்கு அம்மா கைபேசி வழங்கும் திட்டம்:முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

சனி, பெப்ரவரி 27,2016,

சுயஉதவிக் குழு பயிற்றுநர்களுக்கு “அம்மா கைபேசி’ வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.

இது குறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் 92 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டு, 6 லட்சத்து 8 ஆயிரம் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் இயங்கி வருகின்றன. இந்தக் குழுக்களுள் 15 முதல் 20 வரையுள்ள சுய உதவிக் குழுக்களின் பணிகளை மேற்பார்வையிடவும், வழிநடத்தவும் சுமார் 20 ஆயிரம் பயிற்றுநர்கள் ஊரகப் பகுதிகளில் உள்ளனர்.

மகளிர் சுய உதவிக் குழுக்கள் தாங்கள் நடத்தும் கூட்டங்கள், சந்தா தொகை செலுத்துதல், சேமிப்பு, உட்கடன் விவரம் போன்ற பணிகளுக்காக பல்வேறு பதிவேடுகளை பராமரிக்கவும், பதிவு செய்ய செய்யவும், செயல்பாடுகளை மேற்பார்வையிடவும் “அம்மா கைபேசி’ என்ற புதிய திட்டம் தொடங்கப்படும் என்று சட்டப் பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதைத் தொடர்ந்து தற்போது பயிற்றுநர்களுக்கு அம்மா கைபேசிகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார். மொத்தம் 20 ஆயிரம் பயிற்றுநர்களுக்கு இந்த செல்பேசி வழங்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின்கீழ், கைபேசியுடன் சிம் கார்டும் இலவசமாக அளிக்கப்பட்டது. இந்த கைபேசியில் பேசுதல், குறுஞ்செய்திகள், புகைப்படம் அனுப்புதல், ஜி.பி.ஆர்.எஸ்., இணைய தொடர்பு வசதி போன்ற அனைத்து வசதிகளும் உள்ளன.

வங்கிகளுக்கு விருதுகள்: கடந்த 2012 ஆம் ஆண்டு (நிதியாண்டு) முதல் சுயஉதவிக் குழுக்களுக்கு நிதியுதவி வழங்கி சிறப்பாகச் செயல்பட்ட வங்கிகளுக்கு விருதுகளையும் முதல்வர் ஜெயலலிதா அளித்தார்.

இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குநர்-முதன்மை செயல் அலுவலர் மகேஷ்குமார் ஜெயின், மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவர் ஆர்.இளங்கோவன், பல்லவன் கிராமவங்கியின் தலைவர் சுரேஷ்குமார் ஆகியோருக்கு விருதுகளை முதல்வர் வழங்கினார்.