சுற்றுப்புற காற்று மாசு கண்காணிக்கும் வாகன சேவையை முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார்

சுற்றுப்புற காற்று மாசு கண்காணிக்கும் வாகன சேவையை முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார்

செவ்வாய், மார்ச் 01,2016,

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, இன்று தலைமைச் செயலகத்தில், சென்னை மாநகரின் சுற்றுப்புற காற்று மாசின் அளவினை தொடர்ந்து கண்காணிக்க, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில், ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் செலவிலான நடமாடும் தொடர் சுற்றுப்புற காற்று மாசு கண்காணிக்கும் நிலைய வாகனத்தின் சேவையினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

நடமாடும் காற்று கண்காணிப்பு நிலையத்தின் மூலம் சுற்றுப்புற காற்றில் கலந்துள்ள சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு, அமோனியா, ஒசோன், கார்பன் மோனாக்சைடு, பென்சீன் போன்ற வாயுக்களின் அளவையும் மற்றும் காற்றில் கலந்துள்ள 10 மைக்ரான் மற்றும் 2.5 மைக்ரான் அளவுக்கு கீழ் உள்ள நுண்துகள்களையும் கண்டறியலாம். மேலும், வானிலை தொடர்பான விபரங்களை அறியும் வானிலை கண்காணிப்பு கருவிகளும், சென்னை மாநகரின் குறிப்பிட்ட இடங்களில், காற்று மாசின் அளவினை தொடர்ச்சியாக கண்காணிப்பதற்காகவும், தீபாவளி, போகி போன்ற பண்டிகை நாட்களில், காற்றின் தன்மையினை 24 மணி நேரமும் கண்காணிக்கவும், விபத்துகள், புகார்கள், நீதிமன்ற வழக்குகள் போன்றவற்றிற்கு அந்தந்த குறிப்பிட்ட இடத்திலேயே காற்றின் தரத்தினை ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்யும் வகையிலும் இந்த நடமாடும் நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, இன்று தலைமைச் செயலகத்தில், சென்னை மாநகரின் சுற்றுப்புற காற்று மாசின் அளவினை தொடர்ந்து கண்காணிக்க, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில், ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் செலவிலான நடமாடும் தொடர் சுற்றுப்புற காற்று மாசு கண்காணிக்கும் நிலைய வாகனத்தின் சேவையினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மேலும், சுற்றுச்சூழல் குறித்த புகார்களையும், தொழிற்சாலைகளால் ஏற்படும் மாசு குறித்த புகார்களையும் பொதுமக்கள் இணைய வழி மூலம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு தெரிவிக்கவும், புகார் மீது நடவடிக்கை எடுத்து மனுதாரருக்கு இணையதளம் மூலம் தகவல் அனுப்பிடும் வகையிலும், 10 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள மென்பொருள்;

தொழிற்சாலைகள், தீங்கு விளைவிக்கும் கழிவுகளை கையாள்வதற்கான அனுமதியை பெறும் விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக சமர்ப்பித்து, அதனை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பரிசீலனை செய்து, அனுமதியையும், இணையம் மூலமாகவே வழங்குவதற்கு ஏதுவாக 5 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள மென்பொருள் ஆகியவற்றையும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, துவக்கி வைத்தார்.

மேலும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சென்னை, மதுரை, சேலம், கோயம்பத்தூர் மற்றும் கடலூர் ஆகிய இடங்களில் இயங்கும் ஐந்து மேம்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் ஆய்வகங்களுக்கு வழங்கப்பட்ட தேசிய தரச்சான்றிதழை, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவிடம், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு.தோப்பு N.D.வெங்கடாசலம் காண்பித்து, வாழ்த்து பெற்றார்.

இந்தியாவில் உள்ள மாநில மாசு கட்டுப்பாடு வாரியங்களில், தேசிய தரச்சான்று பெற்ற 5 சுற்றுச்சூழல் ஆய்வகங்களை கொண்ட ஒரே வாரியம் என்ற சிறப்பை இதன்மூலம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தொழில் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. P.தங்கமணி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு.தோப்பு N.D.வெங்கடாசலம், தலைமைச் செயலாளர் திரு.கு.ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.