சுவர் இடிந்து நீரில் மூழ்கி உயிரிழந்த 8 பேர் குடும்பத்திற்கு ரூ 32 லட்சம் நிதி உதவி முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

சுவர் இடிந்து நீரில் மூழ்கி உயிரிழந்த 8 பேர் குடும்பத்திற்கு ரூ 32 லட்சம் நிதி உதவி முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

19 November 2015

சென்னை,

தமிழகம் முழுவதும் கனமழை காரணமாக உயிரிழந்த மேலும் 8 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நீரில் மூழ்கி பலி

தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்குப் பருவமழையின் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை காட்டேரி கிராமத்தைச் சேர்ந்த விஜயரங்கன் என்பவரின் மகன் திருமலை, சென்னை மாவட்டம், பெரம்பூர் பி.வி. காலனியைச் சேர்ந்த முகமது காசிம் என்பவரின் மகன் காதர் மொய்தீன், வேலூர் மாவட்டம், ஆம்பூரை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகன் சுகுமார் ஆகியோர் வெள்ளப்பெருக்கின் காரணமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

சுவர் இடிந்து சாவு

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி தேவஸ்தானம் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவரின் மகன் ராஜ்கண்னு, காஞ்சீபுரம் மாவட்டம், உத்திரமேரூர் சாலவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் கெங்கன், விழுப்புரம் மாவட்டம் கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த தம்புசாமி என்பவரின் மனைவி, தாயார் ஆகியோர் மழையின் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்து உயிரிழந்தனர்.

சென்னை அமைந்தகரையை சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மகன் நடராஜன், காஞ்சீபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புத்தூர் நந்திமேடு கிராமத்தைச் சேர்ந்த பத்திரி என்பவரின் மகன் யுவராஜ் ஆகியோர் மழையின் காரணமாக மின் கசிவு ஏற்பட்டு, மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.

ரூ.4 லட்சம் நிவாரணம்

இந்த 8 நபர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் துயர சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.