சுஷ்மா ஸ்வராஜுடன் நிதி அமைச்சர் டி.ஜெயக்குமார் சந்திப்பு : மீனவர் பிரச்சினைக்கு நிரந்திர தீர்வு காண வலியுறுத்தல்

சுஷ்மா ஸ்வராஜுடன்  நிதி அமைச்சர் டி.ஜெயக்குமார் சந்திப்பு : மீனவர் பிரச்சினைக்கு நிரந்திர தீர்வு காண வலியுறுத்தல்

சனிக்கிழமை, மார்ச் 18, 2017,

டெல்லி : மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை தமிழக நிதி அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று டெல்லியில் சந்தித்து  மீனவர் பிரச்சினைக்கு நிரந்திர தீர்வு காண வலியுறுத்தினார். 

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப் படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடை பெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 6-ம் தேதி ராமேசுவரத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற பிரிட்ஜோ (21) என்ற மீனவர் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனைக் கண்டித்து ராமேசுவரம் உட்பட தமிழகம் முழுவதும் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தச் சூழலில் மத்திய வெளி யுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை, தமிழக நிதி மற்றும் மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று டெல்லி யில் சந்தித்துப் பேசினார். 

சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் நிதி அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது:

தமிழக மீனவர் பிரிட்ஜோவை சுட்டுக் கொன்ற இலங்கை கடற்படையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழக மீனவர் கள் சுட்டுக் கொல்லப்படுவது, கைது செய்யப்படுவது, படகுகள் பறிமுதல் செய்யப்படுவது போன்ற இலங்கை கடற்படையின் அட்டூழியங்களுக்கு முடிவுகட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினோம்.

தமிழக மீனவர்களின் வாழ்வா தாரத்தைப் பாதுகாக்க ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்தோம். எங்களது கோரிக்கைகளை பொறுமையாகக் கேட்டுக் கொண்ட அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித் தார். பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப் பட்டது குறித்து இலங்கையில் உள்ள இந்தியத் தூதர் மூலம் நட வடிக்கை எடுக்கப்பட்டு வருவ தாகவும் தெரிவித்தார். ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு இந்த ஆண்டு ரூ. 250 கோடி வழங்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.இவ்வாறு நிதி அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

அப்போது மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.