சூரிய மின்சக்தி திட்டத்தை தமிழக அரசு தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது : நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பாராட்டு

சூரிய மின்சக்தி திட்டத்தை தமிழக அரசு தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது : நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பாராட்டு

செவ்வாய், டிசம்பர் 22,2015,

சூரிய மின்சக்தித் திட்டம் உள்ளிட்ட தமிழக அரசு மேற்கொண்டு வரும் மரபுசாரா எரிசக்தி திட்டங்களுக்கு மத்திய அரசு தொடர்ந்து நிதியுதவி அளிக்கும் என்றும், சூரிய மின்சக்தி திட்டங்களை செயல்படுத்துவதில் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு சிறப்பான பங்களிப்பை ஆற்றி வருகிறது என்றும், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஆற்றல் மிக்க முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு, அதிக அளவிலான பசுமை எரிசக்தியை உற்பத்தி செய்து வருவதாகவும், இந்தியாவின் பசுமை எரிசக்தியில் மூன்றில் ஒரு பங்கு தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுவதாகவும், மக்களவையில் இன்று பேசிய அ.இ.அ.தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டாக்டர் P. வேணுகோபால் தெரிவித்தார். எனவே, தேசிய பசுமை எரிசக்தி நிதியில் இருந்து தமிழகத்திற்கு கூடுதல் உதவி அளிக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர், தமிழக அரசு மேற்கொண்டு வரும் மிகச்சிறந்த பசுமைமின்சக்தித் திட்டங்களுக்கு மத்திய அரசு தேவையான உதவிகளை அளிக்கும் என்றும், சூரிய மின்சக்தி திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது என்றும் பாராட்டு தெரிவித்தார்.