சென்னையில் இந்த அளவிற்கு மழை பாதிப்புகள் ஏற்பட காரணம் முக ஸ்டாலின்: மேயர் சைதை துரைசாமி பேச்சு

சென்னையில் இந்த அளவிற்கு மழை பாதிப்புகள் ஏற்பட காரணம் முக ஸ்டாலின்: மேயர் சைதை துரைசாமி பேச்சு

சனி,நவம்பர்,28-2015

சென்னையில் இந்த அளவிற்கு மழை பாதிப்புகள் ஏற்பட காரணம் இதற்கு முன்பு மாநகராட்சி மேயராக இருந்த பொருளாளர் மு.க.ஸ்டாலின் தான் என்று மேயர் சைதை துரைசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட நடவடிக்கையால் வரலாறு காணாத மழை பெய்தும் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை என்று மன்ற கூட்டத்தில் மேயர் சைதை துரைசாமி பேசினார்.

மன்ற கூட்டம்

சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் ரிப்பன் கட்டிடத்தில் உள்ள மன்ற கூடத்தில் நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற்றது. கூட்டத்துக்கு மேயர் சைதை துரைசாமி தலைமை தாங்கினார். துணை மேயர் பா.பெஞ்சமின், கமிஷனர் விக்ரம் கபூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தை மேயர் சைதை துரைசாமி திருக்குறள் வாசித்து தொடங்கி வைத்தார். அதன் பின்னர் உறுப்பினர்கள் அனைவரும் மேயர் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து மேயர் சைதை துரைசாமி பேசியதாவது:-

மழைநீர் கால்வாய் கட்டமைப்புகளை மாநகராட்சி நிர்வாகம் சரியாக செய்யவில்லை. பராமரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு பலரால் சொல்லப்படுகிறது. இதற்கு யார் காரணம்? இதற்கு முழு முதற் காரணம் உள்ளாட்சியை தன்னாட்சியாக வைத்துக் கொண்டிருந்த மு.க.ஸ்டாலின் தான்.

ஜெயலலிதாவின் தாய் உள்ளம்

மக்களால் நான், மக்களுக்காக நான் என்று முழக்கமிட்டு மாநகராட்சி பணிகளை செய்ய கோடிக்கணக்கில் தாய் உள்ளத்துடன் வாரி வழங்கி, 4 ஆண்டு காலத்தில் 38 ஆயிரத்து 400 பணிகள் நடைபெற காரணமாக அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கி புதிய வளர்ச்சிகளை வடிவமைத்து இருக்கிறார் முதல்- அமைச்சர் ஜெயலலிதா.

இதைப்போன்ற ஆக்கப்பூர்வமான செயல்களை, மு.க. ஸ்டாலினும், மா.சுப்பிரமணியனும் செய்திருந்தால் சென்னை ஒரு முன்மாதிரியான நகரமாக அமைத்திருக்கும். அந்த பணியையும் இப்போது முதல்- அமைச்சர் ஜெயலலிதா தானே செய்து வருகிறார்.

மழைநீர் வடிகால்வாய்

கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011 வரை தி.மு.க.வை சேர்ந்த மா.சுப்பிரமணியன் மேயராக இருந்த காலக்கட்டத்தில் பணி முடிக்கப்பட்ட மழைநீர் வடிகால்வாய்களின் நீளம் 173.07 கி.மீட்டர். செலவிடப்பட்ட தொகை ரூ.69.44 கோடிகள். ஜெ.என்.என்.யு.ஆர்.எம். திட்டத்தில் பணி முடிக்கப்பட்ட மழைநீர் வடிகால்வாய்களின் நீளம் 49.07 கி.மீட்டர். செலவிடப்பட்ட தொகை ரூ.34.55 கோடிகள்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, கடந்த 2011-ம் ஆண்டு அக்டோபர் முதல் 2015-ம் ஆண்டு வரை முடிந்த மற்றும் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் பணிகளின் விவரம்:-

மழைநீர் வடிகால்வாய்களின் நீளம் 361.60 கி.மீட்டர். செலவிடப்பட்ட தொகை ரூ.544.33 கோடிகள். முன்பு அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால்வாய் பணிகளில் 4 அங்குல குழாய் பதிக்கப்பட்டு மழைநீர் செல்ல வழி ஏற்படுத்தப்பட்டது. முன்பு எல்லாம் மழைக்காலங்களில் நிவாரண முகாம்கள் நாட்கணக்கில் இயங்கும். முகாம்களில் உணவு தயாரிக்கப்படும் பணி தொடர்ந்து இருக்கும். ஆனால், இப்போது மக்கள் குடிநீர் நிலைகளில் உபரி நீர் திறக்கும் போது தான் நிவாரண முகாம்களில் வந்து தங்கினார்கள்.

போர்க்கால அடிப்படை

சென்னை மாநகராட்சியில் அனைத்து பணியாளர்களும் வெள்ள நிவாரண பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதுவரை 898 மரங்கள் வேருடன் சாய்ந்து, அவற்றை போர்க்கால அடிப்படையில் அப்புறப்படுத்தப்பட்டது.

22 சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் நிரம்பியதால், அவற்றில் டீசல் பம்புகள் உபயோகப்படுத்தப்பட்டு உடனுக்குடன் வெளியேற்றப்பட்டு தங்கு தடையற்ற போக்குவரத்துக்கு பணியாற்றப்பட்டது. இதற்கு முந்தைய ஆட்சிகளில் எல்லாம் வெள்ளச்சேதம் ஏற்படும் போது, பழுதடைந்த சாலைகளை செப்பனிடுதல், மருத்துவ முகாம்கள் அமைத்தல் போன்ற பணிகள் வெள்ளம் முழுவதும் வடிந்த பிறகு, மழைநின்ற பிறகு தான் தொடங்கப்படும்.

நோய் பாதிக்கப்பட்டவர்கள் குறைவு

கடந்த 1996-2001 வரை ஸ்டாலின் மேயராக இருந்த போது மாநகராட்சி ஸ்தம்பித்து செயலற்று போனதால் மலேரியா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,98,166. வயிற்றுபோக்கால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 28,387.

மா.சுப்பிரமணியன் மேயராக இருந்த 2006-2011 வரை மலேரியா பாதித்தவர்கள் எண்ணிக்கை 74,089. டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்கள் 1,634. வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டவர்கள் 13,486.

தற்போது விரிவாக்கம் செய்யப்பட்ட பின், முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிபடியாக குறைந்து கொண்டே வருகிறது.

ஜெயலலிதா மேற்கொண்ட நடவடிக்கை

மலேரியாவால் பாதிக்கப்பட்டவர்கள்-2012-ல் 6,780, 2013-ல் 5,166, 2014-ல் 2,988 2015(கடந்த 25-ந்தேதி வரை) 1,287 ஆக இந்த 4 ஆண்டுகளிலும் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 16,217 பேர் மட்டுமே. இதே போல டெங்கு பாதிப்புக்கு உள்ளானவர்கள் 2012-ல் 553, 2013-ல் 133, 2014-ல் 137, 2015(கடந்த 25-ந்தேதி வரை) 108 ஆக மொத்தம் 4 ஆண்டுகளில் 931 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்.

வயிற்றுப்போக்கு பாதிப்புக்கு உள்ளானவர்கள் 2012-ல் 2,954, 2013-ல் 2,314, 2014-ல் 1,952, 2015(கடந்த 25-ந்தேதி வரை) 1,923 ஆக 4 ஆண்டுகளில் பாதிப்புக்குள்ளானவர் கள் எண்ணிக்கை 8,743 பேர் மட்டுமே. இந்த புள்ளி விவரமே முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழக மக்கள் மீது எவ்வளவு பந்தபாசம் கொண்டு தன்னார்வத்துடன் நடவடிக்கை எடுத்தார் என்பதாகும்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க அனைத்து சேவை துறைகளையும் ஒருங்கிணைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டதால் இந்த பருவமழையின்போது வரலாறு காணாத கனமழை பெய்த போதும், பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மேயர் சைதை துரைசாமி பேசினார்.