சென்னையில் கள்ளத்துப்பாக்கியுடன் தி.மு.க. பிரமுகர் கைது

சென்னையில் கள்ளத்துப்பாக்கியுடன் தி.மு.க. பிரமுகர் கைது

ஆகஸ்ட் 09 , 2017 ,புதன்கிழமை,

சென்னை :  திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள பிரபல ஓட்டல் அருகில் கள்ளத்துப்பாக்கியுடன் தி.மு.க. பிரமுகர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

சென்னையில் கள்ளத்துப்பாக்கி கலாசாரத்தை ஒழிக்க போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இருப்பினும் அதனை கட்டுப்படுத்த முடியவில்லை.சென்னை போலீசாருடன் இணைந்து ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாரும் கள்ளத்துப்பாக்கி கும்பலை கண்காணித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மதுராந்தகத்தை சேர்ந்த குமார் என்பவர் கள்ளத்துப்பாக்கிகளை வாங்கி விற்பனை செய்யும் கும்பலை சேர்ந்தவர் என்பது குற்றப்புலனாய்வு பிரிவு போலீசுக்கு தெரிய வந்தது.இதையடுத்து அந்த பிரிவை சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவர் மாறு வேடத்தில் சென்று தனது பெயரை சந்தோஷ் என கூறி குமாரை சந்தித்தார். சதுரகிரி மலைப்பகுதியில் வைத்து இந்த சந்திப்பு நடந்துள்ளது.

அப்போது போலீஸ் அதிகாரி, குமாரிடம் தனது நண்பர் ஒருவருக்கு கள்ளத்துப்பாக்கி வேண்டும். வாங்கி தர முடியுமா? என்று கேட்டுள்ளார். இதற்கு பதில் அளித்த குமார், சென்னையில் உள்ள எனது நண்பர்கள் சிலர் துப்பாக்கியை விற்பனை செய்து வருகிறார்கள். அவர்கள் மூலமாக வாங்கி தருகிறேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து குமாரை வைத்தே கள்ளத்துப்பாக்கி கும்பலை பிடிக்க போலீசார் வியூகம் வகுத்தனர்.

இதன்படி, சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள பிரபல ஓட்டல் அருகில் வைத்து கள்ளத்துப்பாக்கி கும்பலை மடக்கி பிடிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து திருவல்லிக்கேணி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் ஓட்டல் அருகே காத்திருந்தபடியே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த கள்ளத்துப்பாக்கி கும்பலை மடக்கி பிடித்தனர். வியாசர்பாடி கன்னிகாபுரத்தை சேர்ந்த கோபிநாத், அண்ணாநகர் ஆர்.வி.நகரை சேர்ந்த முருகன், மதுராந்தகத்தை சேர்ந்த குமார், பிரகாஷ் ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் முருகன் தி.மு.க. பிரமுகர் ஆவார். கோபிநாத் புரட்சி பாரதம் கட்சியில் பொறுப்பில் உள்ளார். கைது செய்யப்பட்ட 4 பேரிடமிருந்தும் ஒரு கள்ளத்துப்பாக்கி மற்றும் 7 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த துப்பாக்கி 9 எம்.எம்.பிஸ்டல் ரகத்தை சேர்ந்ததாகும்.

ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாரும் திருவல்லிக்கேணி போலீசாரும் இணைந்து நடத்திய அதிரடிவேட்டை காரணமாக சென்னையில் கள்ளத்துப்பாக்கி விற்பனை செய்வது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 4 பேரையும் போலீசார் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். அவர்கள் மீது சட்டவிரோதமாக கள்ளத்துப்பாக்கியை வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.