சென்னையில் கூடுதலாக 50 பண்ணை பசுமை கடைகள்: காய்கறி விலையைக் கட்டுப்படுத்த முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை

சென்னையில் கூடுதலாக 50 பண்ணை பசுமை கடைகள்: காய்கறி விலையைக் கட்டுப்படுத்த முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை

18 November 2015

சென்னையில் கூடுதலாக 50 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் தொடங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். கடும் மழை காரணமாக, வெளிச்சந்தையில் காய்கறிகளின் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த இந்தக் கடைகள் கூடுதலாக திறக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து, தமிழக அரசு  வெளியிட்ட அறிவிப்பு: தமிழகம் முழுவதும் உள்ள 58 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும், இரண்டு நகரும் கடைகள் சென்னை மாநகரில் இயக்கப்படுகின்றன. பண்ணை பசுமை கடைகளில் இதுவரை சுமார் ரூ.33 கோடி மதிப்பில் 11 ஆயிரத்து 385 மெட்ரிக் டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
கடந்த சில நாள்களாக தமிழகத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக சென்னை நகருக்கு காய்கறிகள் வரத்து குறைந்துள்ளன. எனவே, காய்கறிகளின் விலை உயர்ந்து வருகிறது.
காய்கறிகளின் விலையைக் கட்டுப்படுத்தும் வகையில், சென்னை நகரில் 50 கூடுதல் காய்கறி விற்பனை மையங்களை தாற்காலிகமாகத் திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இப்போது சென்னை மாநகரில் செயல்பட்டு வரும் 42 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளுடன் கூடுதலாக 50 கடைகள் தொடங்கப்படும். எனவே, சென்னை மாநகரில் 92 கடைகளில் காய்கறிகள் விற்பனை செய்யப்படும்.
பொது மக்கள் அதிகளவு பயன்படுத்தும் காய்கறிகளான வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, கத்தரிக்காய், பீட்ரூட், புடலங்காய் ஆகிய காய்கறிகள் இந்தக் கடைகளில் விற்பனை செய்யப்படும்.
கடைகள் அமையும் இடங்கள்: சென்னையில் துரைப்பாக்கம், மீனம்பாக்கம் டி.யு.சி.எஸ். அங்காடிகள், தாடண்டர் நகர், சாஸ்திரி நகர், விருகம்பாக்கம், சின்மயாநகர், திருநகர் (வடபழனி), மன்னார் முதலியார் தெரு, போரூர்-காரப்பாக்கம், கணேஷ்நகர், கௌரிவாக்கம், சந்தோஷபுரம் (மூன்றும் கிழக்கு தாம்பரம்), ராமகிருஷ்ணன் தெரு (மேற்கு தாம்பரம்), வசந்தம் காலனி(வில்லிவாக்கம்), திருமங்கலம்(அண்ணாநகர் மேற்கு), ஏ.கே.சாமிநகர்(அயனாவரம்), பி.பி.கார்டன்(அமைந்தகரை), கிருஷ்ணாபுரம் (அம்பத்தூர்), புரசைவாக்கம், மணலி, எத்திராஜ்சாமி தெரு(எருக்கஞ்சேரி), முத்தமிழ் நகர் (கொடுங்கையூர்), பஜனை கோயில் தெரு, பாரதியார் தெரு(இரண்டும் எர்ணாவூர் பகுதி), பழைய வண்ணாரப்பேட்டை, ராயபுரம், பூண்டி தங்கம்மாள் தெரு, அருணாசலேஸ்வரர் தெரு(இரண்டும் புது வண்ணாரப்பேட்டை), தண்டையார்நகர், சௌகார்பேட்டை, தண்டையார்பேட்டை, கும்மாளம்மன்கோயில் தெரு(தண்டையார்பேட்டை), ஐ.சி.எஃப்., பேருந்து நிலையம், சைதாப்பேட்டை, நங்கநல்லூர், ஆதம்பாக்கம், மேற்கு மாம்பலம், ரங்கைய்யா கார்டன் தெரு, கிழக்கு அபிராமபுரம்(இரண்டும் மயிலாப்பூர்) ஆகிய இடங்களில் உள்ள கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் அமைக்கப்படும்.
அண்ணாநகர் மேற்கு, அசோக்நகர், ஆர்.கே.மடம் சாலை, இந்திரா நகர், ஆழ்வார்பேட்டை, தாம்பரம், கே.கே.நகர் மேற்கு, ராயப்பேட்டை, திருவான்மியூர், ஆற்காடு சாலை, போரூர் ஆகிய இடங்களில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பல்பொருள் அங்காடிகளில் பண்ணை பசுமை கடைகள் அமைக்கப்படும்.
தாற்காலிக பண்ணை பசுமை கடைகள் இன்று திறப்பு
சென்னை, நவ.17: முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள 50 தாற்காலிக பண்ணை பசுமை கடைகள் சென்னையில் புதன்கிழமை முதல் திறக்கப்படுகின்றன. தண்டையார்பேட்டை, சாஸ்திரிநகர், துரைப்பாக்கம் உள்ளிட்ட 50 இடங்களில் தாற்காலிக பண்ணை பசுமை கடைகள் திறக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
இந்தக் கடைகள் அனைத்தும் புதன்கிழமை காலை 10 மணி முதல் செயல்படத் தொடங்கும் என கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.