சென்னையில் மழையால்,வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வீடுகளில் குடியேறிய மக்கள் : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மனமார்ந்த நன்றி

சென்னையில் மழையால்,வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வீடுகளில் குடியேறிய மக்கள் : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மனமார்ந்த நன்றி

புதன், டிசம்பர் 30,2015,
சென்னையில் ஏற்பட்ட கனமழை வெள்ளம் காரணமாக, அடையாறு கரையோரம் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா, முதற்கட்டமாக சென்னை ஒக்கியம், துரைப்பாக்கம், பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டுள்ள 10 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, ஆயிரத்து 115 குடும்பங்கள், ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் உடனடியாக குடியேறியுள்ளன. மழை வெள்ளத்தால் வாழ்க்கையை இழந்த தங்களுக்கு, மழையின் ஈரம் காய்வதற்குள், புதுவீடு வழங்கி மறுவாழ்வு அளித்த முதலமைச்சர் ஜெலலிதாவுக்கு, மக்கள் தங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.

சென்னையில் இதுவரை கண்டிராத அளவிற்கு ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக, வீடுகளை இழந்த அனைவருக்கும் வீடு வழங்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில், அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் ஆகியவற்றின் கரையோர குடிசைகளில் வசித்த மக்களுக்கு குடிசைகளுக்கு மாற்றாக நிரந்தர வீடுகள் வழங்கிடவும், தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மூலம் புதிதாக 50 ஆயிரம் வீடுகளும், அனைவருக்கும் வீடு திட்டத்தின் மூலம் 50 ஆயிரம் வீடுகளும் கட்டித்தரப்படும் என்றும் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அறிவித்தார். இந்த திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா, நேற்று தொடங்கி வைத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடு ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, முதற்கட்டமாக சைதாப்பேட்டை ஆத்துமாநகர் பகுதியில் வசித்த ஆயிரத்து 115 குடும்பங்கள் அவர்களின் எஞ்சிய உடைமைகளுடன், சென்னை மாநகராட்சி சார்பில் ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதிக்கு உடனடியாக அழைத்துவரப்பட்டனர். அவர்களை குடிசைமாற்று வாரிய அதிகாரிகள் வரவேற்று அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளை அடையாளம் காட்டினர். புதிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளில் புது நம்பிக்கையுடனும், மகிழ்ச்சியுடனும் அவர்கள் குடியேறியுள்ளனர்.

இந்த பகுதிக்கு அழைத்துவரப்பட்ட மக்களுக்கு சிறப்பு முகாம் அமைத்து, உடனடியாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் உடனடியாக பள்ளிகளில் சேர்வதற்கான சான்றிதழ்களை கல்வித்துறை அதிகாரிகள் வழங்கினர். குடும்ப அட்டைகளை உடனடியாக அந்த பகுதியில் உள்ள நியாயவிலைக் கடைகளுக்கு மாற்றும் பணிகளை உணவு வழங்கல்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

மழை வெள்ளத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு உடனடியாக அடுக்குமாடி வீடுகளை ஒதுக்கீடு செய்து, அவர்களை குடியேறச் செய்து, குடும்ப அட்டை, பள்ளிச் சான்றிதழ்கள் உள்ளிட்ட அனைத்தையும் உடனே வழங்கி, அந்த குடும்பங்களுக்கு மறுவாழ்வு அளித்துள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, அவர்கள் தங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.