சென்னையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த துப்புரவு தொழிலாளியின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஜெயலலிதா 4 லட்சம் ரூபாய் நிதியுதவி

சென்னையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த துப்புரவு தொழிலாளியின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஜெயலலிதா 4 லட்சம் ரூபாய் நிதியுதவி

ஞாயிறு, டிசம்பர் 13,2015,

சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதியில் துப்புரவு பணி மேற்கொண்டபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த துப்புரவு தொழிலாளியின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகராட்சி, 6-வது மண்டலம், 77-வது கோட்டத்தில் துப்புரவு பணியாளராகப் பணிபுரிந்து வந்த, திருவல்லிக்கேணி, ராம் நகரைச் சேர்ந்த திரு. காந்தாராவ், நேற்று, வெள்ளம் பாதித்த புளியந்தோப்பு பகுதியில் துப்புரவு பணியை மேற்கொண்டிருந்தபோது மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகவும் துயரம் அடைந்ததாகத் தெரிவித்துள்ளார். இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த திரு. காந்தாராவின் குடும்பத்திற்கு, தமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நான்கு லட்சம் ரூபாய் வழங்க தாம் உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.