சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடரும் கனமழை – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடரும் கனமழை – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக, தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை தொடர்ந்து நீடிக்கிறது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் விடியவிடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் இன்று பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை சற்று தாமதமாக தொடங்கிய நிலையில், தற்போது, நாளுக்கு நாள் மழை தீவிரமாகி வருகிறது. வங்கக் கடலின் தெற்கு பகுதியில் அந்தமான் அருகே உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் உட்புற பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது.

சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் இரவு முழுவதும் இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. கிண்டி, ஈக்காட்டுத்தாங்கள், கோயம்பேடு, அண்ணாநகர் உள்ளிட்ட நகரின் உட்பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் சென்னையின் சுற்றுவட்டாரப் பகுதிகளான, தாம்பரம், ஆவடி, செங்குன்றம், வண்டலூர், பூந்தமல்லி பகுதிகளிலும் விடிய விடிய பலத்த மழை பெய்து வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, அம்பத்தூர், பூந்தமல்லி, மாதவரம், செங்குன்றம் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்தது. இதனால், இம்மாவட்டத்தில் உள்ள ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகளுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில், செங்கோட்டை, வள்ளியூர், ராதாபுரம் போன்ற இடங்களில் பலத்த மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால் அங்கு குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஏரி, குளங்கள் அனைத்தும் நிரம்பி வருகின்றன. உரிய நேரத்தில் தூர் வாரும் பணிகள் நடைபெற்றதால், விவசாயிகள் அனைவரும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

இதேபோல், தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. பலத்த மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.