சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியை சிறந்த முறையில் நடத்திட ரூ.2 கோடி நிதி:முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியை சிறந்த முறையில் நடத்திட ரூ.2 கோடி நிதி:முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்

செவ்வாய், டிசம்பர் 29,2015,

சென்னை,

இந்த சீசனுக்கான சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியை சிறந்த முறையில் நடத்திட உதவிடும் வகையில் தமிழக அரசின் சார்பில் ரூ.2 கோடி நிதியை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.

இது குறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-தமிழகத்தில் திறமைமிக்க விளையாட்டு வீரர்களை கண்டறிந்து, அவர்கள் தேசிய மற்றும் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறும் வகையில் சிறந்த பயிற்சி அளித்தல், சாதனை புரியும் வீரர் வீராங்கனைகளுக்கு ஊக்கத் தொகை வழங்குதல், விளையாட்டு விடுதிகளை அமைத்தல், பன்னாட்டுத் தரத்தில் விளையாட்டு மைதானங்கள் அமைத்தல் போன்ற பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.

டென்னிஸ் விளையாட்டில் புகழ்பெற்ற வீரர்கள் கலந்து கொள்ளும் மிக முக்கிய போட்டியான சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தால் ஆண்டுதோறும் சென்னையில் நடத்தப்பட்டு வருகிறது. இது ஏ.டி.பி. பன்னாட்டு தரவரிசை போட்டிகளில் ஒன்றாகும். முதல்-அமைச்சர் ஜெயலலிதா, 2005-ஆம் ஆண்டு சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியினை சிறப்பாக நடத்திட முதன் முறையாக தமிழக அரசின் சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கினார். பின்னர் 2012-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் 2 கோடி ரூபாய் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி நடத்திட தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.

ரூ.2 கோடி வழங்கினார்

இந்த நிலையில் தலைசிறந்த வீரர்கள் பங்கேற்கும் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய ஸ்டேடியத்தில் வருகிற 4-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை நடக்க இருக்கிறது. 2016-ஆம் ஆண்டு சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியை சிறப்பான முறையில் நடத்திட ‘பிரதான பிளாட்டினம் ஸ்பான்சர்’ என்ற வகையில் தமிழக அரசின் சார்பில் 2 கோடி ரூபாய்க்கான காசோலையினை முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு டென்னிஸ் சங்கத் தலைவர் எம்.ஏ. அழகப்பனிடம் வழங்கினார்.

அப்போது, தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் கவுரவ செயலாளர் சி.பி. நாகேஸ்வர ரெட்டி, முதன்மை செயல் அலுவலர் டன் ஜோஷி ஆகியோர் உடனிருந்தனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.