சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூரில் இன்று கனமழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூரில் இன்று கனமழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம் தகவல்

செவ்வாய், மே 17,2016,

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாலச்சந்திரன், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தெற்கே  – தென்கிழக்கே 240 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.

மேலும் இந்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று வடக்கு மற்றும் வடமேற்கு தமிழகம் – தெற்கு ஆந்திர நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வடக்கு தமிழக மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களில் கன மழை மற்றும் மிக கன மழை பெய்யும் என்றும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் கூறினார்.

இதனால் மீனவர்கள் அடுத்த 48 மணி நேரத்துக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும், தரைக்காற்று பலமாக வீசும் என்றும் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.