சென்னை மாநகர் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்கிற தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் அறிவிப்பு, பொதுமக்களுக்கு ஒரு வரப்பிரசாதம்: “தினமணி” நாளிதழ் பாராட்டு

சென்னை மாநகர் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்கிற தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் அறிவிப்பு, பொதுமக்களுக்கு ஒரு வரப்பிரசாதம்: “தினமணி” நாளிதழ் பாராட்டு

வியாழன் , டிசம்பர் 10,2015,

சென்னையிலிருந்து வெளியிடங்களுக்குச் செல்லும் சென்னை மாநகர பேருந்துகளில் கடந்த 5-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை 4 நாட்கள் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என்ற முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் அறிவிப்பு, பொதுமக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்திருந்ததாக பிரபல தமிழ் நாளிதழான “தினமணி” பாராட்டு தெரிவித்துள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, பாதிப்பு அடைந்துள்ள மக்கள், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட போர்க்கால நடவடிக்கைகளின் காரணமாக, வெள்ளப் பாதிப்பில் இருந்து மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்குவதுடன் மருத்துவ வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன – இதுவன்றி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தங்கள் இல்லங்களிலேயே தங்கி உள்ளவர்களுக்கும் உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பெருமழையால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கடந்த 5-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை 4 நாட்களுக்கு சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளிலும் பயணம் செய்யும் மக்களிடமிருந்து கட்டணம் எதுவும் வசூலிக்கப்படக் கூடாது என முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.

இந்த நான்கு நாட்களும் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும் பேருந்துகளில், கட்டணம் ஏதுமின்றி மக்கள் பயணம் செய்யலாம் என்றும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்திருந்தார். இந்நிலையில், முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு, பிரபல தமிழ் நாளிதழான “தினமணி” தனது தலையங்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளது.

சென்னையிலிருந்து வெளியிடங்களுக்குச் செல்லும் சென்னை மாநகர் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்கிற தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் அறிவிப்பு, பொதுமக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது – அந்த அறிவிப்பு வந்திருக்காவிட்டால், மக்கள் அடைந்திருக்கக் கூடிய அவலத்தை சொல்லி மாளாது – அவர்கள் காஞ்சிபுரம், செங்கல்பட்டு என அண்மை ஊர்களுக்கு பயணமானார்கள் – சொந்த ஊர்களுக்கும் பயணமானார்கள் – பொதுமக்களில் பலர், முதலமைச்சரின் இந்த சலுகையை பயன்படுத்தி, தங்களுக்கு உடனடியாக தேவைப்படும் பணத்தை வெளியிடங்களுக்கு சென்று ஏ.டி.எம். இயந்திரங்களில் இருந்து பெற்றனர் – கட்டணமில்லா அறிவிப்பை, முதலமைச்சர் வெளியிட்டிருக்காவிட்டால், நிவாரண முகாம்களில் இருப்போரின் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்திருக்கும் என்பதே உண்மை என “தினமணி” சுட்டிக்காட்டியுள்ளது.