முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவுக்கிணங்க,கல்விச் சான்றிதழ்கள் இழந்தவர்களுக்கு சிறப்பு முகாம் மூலம் கட்டணமில்லா நகல் சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவுக்கிணங்க,கல்விச் சான்றிதழ்கள் இழந்தவர்களுக்கு சிறப்பு முகாம் மூலம் கட்டணமில்லா நகல் சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை

புதன்கிழமை, ஜனவரி 27, 2016,

வடகிழக்கு பருவமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக கல்விச் சான்றிதழ்கள் இழந்தவர்களுக்கு, சிறப்பு முகாம்கள் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, ஒப்புகைச்சீட்டு வழங்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுக்கிணங்க, கட்டணமில்லாமல் அவற்றின் நகல்கள் இன்றுமுதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் பெய்த வரலாறு காணாத கனமழை வெள்ளத்தினால் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு கட்டணமில்லாமல் நகல் சான்றிதழ்கள் வழங்க, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். இதன் அடிப்படையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் சுமார் 135 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

சென்னையில் 54 பள்ளிகளிலும், 10 வருவாய் வட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. 13 ஆயிரத்து 334 பத்தாம் வகுப்பு மாணவர்களும், 8 ஆயிரத்து 902 ப்ளஸ் டூ மாணவர்களும் நகல் சான்றிதழ் கோரி விண்ணப்பித்தனர். நகல் சான்றிதழ் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு சிறப்பு முகாம்களில் ஒப்புகைச்சீட்டு வழங்கப்பட்டன.

கல்வி நகல் சான்றிதழ் கோரி விண்ணப்பித்தவர்களின் மூல சான்றிதழ் சரிபார்க்கும் பணி நிறைவடைந்து, இன்றுமுதல் கல்வி நகல் சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒப்புகைச்சீட்டு பெற்ற சிறப்பு முகாம்களிலேயே அந்தச்சீட்டினை காண்பித்து கல்வி நகல் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.