செயல்வேகம் மிக்க நாட்டின் மிகச்சிறந்த முதலமைச்சர் ஜெயலலிதா : டெல்லி மகளிர் பிரதிநிதிகள் மாநாட்டில் புகழாரம்

செயல்வேகம் மிக்க நாட்டின் மிகச்சிறந்த முதலமைச்சர் ஜெயலலிதா : டெல்லி மகளிர் பிரதிநிதிகள் மாநாட்டில் புகழாரம்

ஞாயிறு, மார்ச் 06,2016,

நாட்டின் மிகச்சிறந்த முதலமைச்சர்களில் ஒருவராக செல்வி ஜெயலலிதா திகழ்கிறார் என்றும், செயல்வேகம் மிக்கவராக இருப்பதால் அவர் அனைவரது போற்றுதலுக்கும் உரியவர் என்றும் டெல்லி மகளிர் மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதிநிதிகள், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவிற்கு புகழாரம் சூட்டியுள்ளனர்.

“எழுச்சிமிகு இந்தியாவைக் கட்டமைக்கும் மகளிர் மக்கள்பிரதிநிதிகள்” என்ற தலைப்பிலான மாநாடு, டெல்லி விஞ்ஞான் பவனில் நேற்று துவங்கியது. மக்களவை சபாநாயகர் திருமதி சுமித்ரா மகாஜன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டை, குடியரசுத் தலைவர் திரு. பிரணாப் முகர்ஜி தொடங்கி வைத்தார். இதில், குடியரசு துணைத் தலைவர் திரு. ஹமீது அன்சாரி, பிரதமர் திரு. நரேந்திர மோடி, பங்களாதேஷ் நாடாளுமன்ற சபாநாயகர் டாக்டர் ஷிரின் ஷர்மின் சவுத்ரி உள்பட பலர் பங்கேற்றனர். நாடு முழுவதும் இருந்து 300-க்கும் மேற்பட்ட பெண் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர். தமிழகத்தில் இருந்து அமைச்சர்கள் திருமதி பா.வளர்மதி, திருமதி. எஸ். கோகுல இந்திரா, பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் நெஜ்மா ஹப்துல்லா மற்றும் பெண் பிரதிநிதிகள், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, இந்தியாவின் மிக முக்கிய அரசியல் தலைவராகத் திகழ்கிறார் என்றும், பெண்களுக்காக பல்வேறு சிறப்புத் திட்டங்களைத் தீட்டி, நாட்டில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் பெண்கள் முன்னேற்றத்தை உறுதி செய்துள்ளார் என்றும் பாராட்டு தெரிவித்தனர்.

மாநாட்டின் 2-ம் நாளான இன்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெண்அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உரையாற்றி வருகின்றனர். இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ள பீகார் பிரதிநிதிகள் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் நிர்வாகத் திறமைகளை வியந்துபோற்றினர். முதலமைச்சரின் துணிச்சல், செயல்வேகம் போன்றவற்றை அனைத்துப் பெண்களும் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.