செல்லாத நோட்டு நடைமுறைக்குப் பிறகு 40 ஆயிரம் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் ; தமிழக அரசு விளக்கம்

செல்லாத நோட்டு நடைமுறைக்குப் பிறகு 40 ஆயிரம் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் ; தமிழக அரசு விளக்கம்

ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 04, 2016,

செல்லாத ரூபாய் நோட்டு நடைமுறைக்குப் பிறகும்,தமிழக அரசு மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கைகளின் மூலம், கூட்டுறவு வங்கிகளில் 40 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.148 கோடி பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 32,430 விவசாயிகளுக்கு ரொக்கமாகப் பணம் செலுத்தாமலேயே விவசாய இடுபொருள்கள் அளிக்கப்பட்டுள்ளன என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

உயர்மதிப்பிலான செல்லாத ரூபாய் நோட்டுகளை கூட்டுறவு வங்கிகள் வாங்குவதற்கும், அதனை வங்கிக் கணக்குகளில் செலுத்துவதற்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தத் தடையால் கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகளுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன.இதைத்தொடர்ந்து, விவசாயிகள் தடையின்றி பயிர்க்கடன்கள் பெற வசதியாக சிறப்பு நடைமுறைகளை தமிழக அரசு உருவாக்கியது. அதன்படி, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் இப்போதுள்ள நடைமுறைகளைப் பின்பற்றி விவசாய உறுப்பினர்களுக்குத் தொடர்ந்து பயிர்க்கடன்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.மேலும், வாடிக்கையாளர்களை அறிந்து கொண்டு கணக்குகளைத் தொடங்கும் விதிகளைக் கடைப்பிடித்து, பயிர்க்கடன் பெறும் ஒவ்வொரு கடன்தாரருக்கும் கட்டணம் ஏதும் வசூலிக்காமல் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு வருகிறது.

விவசாயிகளுக்குத் தேவையான இடுபொருள்களான உரம், விதைகள் ஆகியவற்றுக்கான தொகையை ரொக்கமாகச் செலுத்த வலியுறுத்தாமல், அவர்களுக்கு பயிர்க்கடன் வழங்கும்போது அந்தக் கணக்கில் பற்று வைத்து, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் வழங்கி வருகின்றன. அதாவது, ரொக்கமாகப் பணம் செலுத்தாமலேயே விவசாயிகள் இடுபொருட்களைப் பெற இயலும். பயிர்க் காப்பீட்டுத் தொகையை விவசாயிகளின் பயிர்க்கடன் கணக்கில் பற்று வைத்து, தொடர்புடைய காப்பீடு நிறுவனத்துக்கு மத்தியக் கூட்டுறவு வங்கிகள் வரும் 5 -ஆம் தேதிக்கு முன்பு செலுத்தும்.தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பயிர்க் கடன் பெறாத விவசாயிகள், வரைவோலை அல்லது ரொக்கமாகச் செலுத்தி தங்களுக்குத் தேவையான உரம், இடுபொருள்கள், விவசாயப் பணிகளுக்கான வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கடந்த நிதியாண்டில் (2015-16) நவம்பர் 30 -ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் 7 லட்சத்து 42 ஆயிரத்து 629 விவசாயிகளுக்கு ரூ.4,061.14 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. நிகழ் நிதியாண்டில் மார்ச் 30 வரையில், 4 லட்சத்து 7 ஆயிரத்து 387 விவசாயிகளுக்கு ரூ.2,376.83 கோடி பயிர்க்கடன் அளிக்கப்பட்டுள்ளது.செல்லாத ரூபாய் நோட்டுகள் நடைமுறையை தொடர்ந்து விவசாயிகள் பயிர்க்கடன் பெறுவதற்கான புதிய நடைமுறைகள் கடந்த 23 -ஆம் தேதி வெளியிடப்பட்டன. அந்தத் தேதியில் இருந்து டிசம்பர் 2 வரை, மத்திய கூட்டுறவு வங்கிக் கிளைகளில் 76,440 விவசாய உறுப்பினர்களுக்கு கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
அதில், 40,892 விவசாயிகளுக்கு ரூ.148.22 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. 32,430 விவசாயிகளுக்கு ரூ.23.99 கோடி அளவுக்கு ரொக்கமாகப் பணம் செலுத்தாமலேயே இடுபொருள்கள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும், 19,250 விவசாயிகளுக்கு ரூ.1.78 கோடி பயிர்க் காப்பீட்டுத் தொகையை அவர்களது பயிர்க்கடன் கணக்கில் பற்று வைத்து தொடர்புடைய காப்பீடு நிறுவனத்துக்கு கடந்த 2 ஆம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது.கூட்டுறவுச் சங்கங்களில் பயிர்க்கடன் பெறாத 2 லட்சத்து 64 ஆயிரத்து 967 விவசாயிகளிடம் இருந்து ரூ.18.6 கோடி பயிர்க் காப்பீட்டுத் தொகை வசூலிக்கப்பட்டு தொடர்புடைய காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.