செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகள் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகள் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

ஜூலை ,14 ,2017 ,வெள்ளிக்கிழமை,

சென்னை : மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட செவிலியர்களுக்‍கு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி சென்னையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார். 

நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தில் சுகாதாரத்துறைக்‍கு என மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அமைக்‍கப்பட்டது. இதன்மூலம், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவம் சாரா பணியாளர்கள் என இதுவரை 21 ஆயிரத்து 23 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 9 ஆயிரத்து 190 செவிலியர்கள் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக தற்போது மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள 516 செவிலியர்களுக்‍கு பணிநியமன ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்‍கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேற்று நடைபெற்றது.இதில் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி கலந்துகொண்டு 16 செவிலியர்களுக்‍கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், சுகாதாரத்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.